தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த கலைஞர் கருணாநிதி ஆட்சியை விட்டு போகும்போது 50 ஆயிரம் கோடி ரூபாய் கடன் இருந்தது. 2021-ல் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகும்போது 5 லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாயாக கடன் உயர்ந்து இருந்தது.
தற்போது 7 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. அதை நாங்கள் மறுக்கவும் இல்லை. மறைக்கவும் இல்லை. தமிழ்நாட்டின் வருவாய்க்கு ஏற்ப எவ்வளவு கடன் வாங்கலாம் என வரையறை உள்ளது. இதை தாண்டி வாங்கவில்லை. இன்னும் அதிகமாக வாங்கலாம்.
வாங்கும் பணத்தில் கட்டமைப்புகளை உருவாக்கி, வேலை வாய்ப்புகளை உருவாக்கி மூலதனமாக ஆகிறதே தவிர, செலவு செய்யவில்லை.
சுதந்திரம் பெற்றதில் இருந்து 2014 வரைக்கும் சுமார் 67 ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த கடன் 55 லட்சம் கோடி ரூபாய். கடந்த 9 ஆண்டு காலத்தில் 100 லட்சம் கோடி. யார் அதிகமாக கடன் வாங்கியிருக்கிறார் என்று பார்க்க வேண்டும்.
இவ்வாறு சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
நேற்று மதுரை எய்ம்ஸ் குறித்து பாராளுமன்றத்தில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-
ரூ.1,977 கோடியிலான மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு ரூ.1,627 கோடி ஜப்பான் நிறுவனத்தில் கடன் எடுத்து மத்திய அரசு அதை செலுத்தும். தமிழ்நாடு அரசுக்கு எந்த ஒரு கடன் உபாதையும் இல்லை. மத்திய அரசுக்குத்தான் கடன். தமிழ்நாடு அரசுக்கு இல்லை.
மற்ற இடங்களில் கட்டப்படும் எய்ம்ஸ் ஆஸ்பத்திரிகளில் 700 படுக்கைகள்தான் இருக்கும். ஆனால் மதுரையில் 950 படுக்கைகள் இருக்கும். கூடுதலாக தரப்படும் 150 படுக்கைகள் தொற்றுநோய் பிரிவுக்கானது. எனவே தமிழ்நாட்டுக்கு கடனும் இல்லை. நிறைய படுக்கைகளும் கிடைக்கும்.
(அப்போது, எய்ம்ஸ் எப்போ வரும்? என தி.மு.க. உறுப்பினர்கள் கேட்டனர். அதற்கு நிர்மலா சீதாராமன்…) 'இப்போது வரைக்கும் வெட்கமாக இல்லையா? என கேட்டவர்கள், தற்போது கடனை மத்திய அரசு செலுத்தும் என்று சொன்னவுடன் எப்போது வரும்?' என கேட்கிறார்கள்.
நிலம் எடுக்க தமிழ்நாடு அரசு தாமதப்படுத்தியதால்தான் மொத்த திட்ட மதிப்பு ரூ.1,200 கோடியில் இருந்து ரூ.1,900 கோடியாக உயர்ந்தது. எனவே, பழியை அந்த மாநில அரசுதான் எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, மத்திய அரசு மீது போடக்கூடாது.
எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.