குமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.
இந்நிலையில் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவர், அங்கு படிக்கும் மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளனர்.
இதனை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பள்ளி நிர்வாகத்தை வலியுறுத்த அவர்கள் திட்டமிட்டனர்.
அவர்கள் இன்று காலை 10 மணிக்கு பள்ளிக்கூடம் தொடங்கியதும் திரண்டு வந்தனர். பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்ட மாணவிகளின் பெற்றோர், பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர்.. இதனால் அங்கு பதட்டம் நிலவியது.
இது பற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அவர்கள், அங்கு திரண்டு இருந்த பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இது குறித்து கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.