No results found

    தமிழ்நாடு நாள் ஊர்வலம்


    சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயரிட வலியுறுத்தி, தியாகி சங்கரலிங்கனார் 1956-ல் தனி நபர் போராட்டமாக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து இறந்தார். தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக அண்ணா இருந்தபோது 18.7.1968 அன்று சென்னை மாநிலம் என்ற பெயரை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்து சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி தமிழ்நாடு உருவான தினம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் தமிழ்நாடு நாள் குறித்த புகைப்பட கண்காட்சி செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் பெரம்பலூரில் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட ஊர்வலத்தை கலெக்டர் கற்பகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் பாலக்கரை வழியாக சென்று கலெக்டர் அலுவலகத்தில் முடிவடைந்தது. இதில் மாணவ, மாணவிகள் தமிழ் மொழி குறித்தும், தமிழ்நாட்டின் பெருமைகள் குறித்தும் பறைசாற்றும் வகையில் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர்.

    அதனைத்தொடர்ந்து தமிழ்நாடு நாள் குறித்தும், தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் தமிழ்நாடு உருவானதற்காக பாடுபட்ட தலைவர்களின் வரலாற்றை விளக்கும் வகையிலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த புகைப்பட கண்காட்சியை கலெக்டர் தொடங்கி வைத்து பார்வையிட்டார். மேலும் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டியில் மாவட்ட அளவில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு காசோலைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். இதில் பிரபாகரன் எம்.எல்.ஏ., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி, மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாவேந்தன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    Previous Next

    نموذج الاتصال