இந்நிலையில், எமர்ஜென்சியின்போது பாட்டி இந்திரா காந்தியால் சிறைக்குச் சென்றவர்கள் தற்போது பேரன் ராகுல் காந்தியை வரவேற்கின்றனர் என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக ஒடிசாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா பேசுகையில், இன்று அரசியலில் விசித்திரமான விஷயங்கள் நடக்கின்றன. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் சிறையில் அடைக்கப்பட்ட தலைவர்கள் தற்போது அவரது பேரன் ராகுல் காந்தியை வரவேற்கின்றனர். ஜெயப்பிரகாஷ் நாராயணின் மாணவ தலைவர்களாக செயல்பட்ட நிதிச்ஷ்குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரை இந்திரா காந்தி அரசு கைது செய்து சிறையில் அடைத்தது. அப்போது லாலு பிரசாத் 22 மாதங்களும், நிதிஷ் குமார் 20 மாதங்களும் சிறையில் இருந்தனர்.
எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக உத்தவ் தாக்கரே பாட்னா சென்றதைப் பார்த்தேன். அவரது தந்தை, இந்து ஹிருதய் சாம்ராட் பாலாசாகேப் தாக்கரே காங்கிரசை எதிர்த்தார். பாலாசாகேப் ஒருமுறை காங்கிரசில் சேர்வதற்குப் பதிலாக துகானை (தனது அரசியல் கட்சியான சிவசேனாவைக் குறிப்பிட்டு) மூடுவதாகக் கூறியிருந்தார். இப்போது, அவரது மகன் துகானை மூடுகிறார். பிரதமர் நரேந்திர மோடியை உலக தலைவர்கள் பாராட்டியதை காங்கிரசால் ஜீரணிக்க முடியவில்லை. வாரிசு அரசியலை கடுமையாக எதிர்க்கும் மோடி, நாட்டில் வளர்ச்சி அரசியலை அறிமுகப்படுத்தினார் என தெரிவித்துள்ளார்.