உடல் ரீதியான தொடர்புகளை விட உள்ளரீதியான தொடர்புகள் அதிக நெருக்கத்தை ஏற்படுத்தும். கணவருக்காக காத்திருத்தல் ஒரு சுகம்தான். நமக்காக ஒருத்தி வீட்ல காத்திட்டு இருப்பா என்ற எண்ணமே மனைவி மீதான நேசத்தை அதிகரிக்குமாம்.
வீட்டில் இருக்கும் பெண்களுக்கு எத்தனையோ வேலை இருக்கும். அதை செய்யும் போதே அவருக்கு இது பிடிக்குமே என்று பார்த்து பார்த்து செய்தால் உங்களவர் அப்படியே உருகிப்போவார். நீங்கள் செய்யும் சமையலில் உங்கள் நேசத்தை வெளிப்படுத்துங்கள் அப்புறம் அவர் ஹோட்டல் சாப்பாடு பக்கம் திரும்பியே பார்க்க மாட்டார்.
காதலிக்கும் போது நினைத்த நேரத்தில் எல்லாம் போன் செய்திருப்பீர்கள். எத்தனையோ முறை ஐ லவ் யூ சொல்லியிருப்பீர்கள். அதெல்லாம் திருமணத்திற்குப் பின்னர் காணாமல் போயிருக்கும். வீட்டு வேலை, குழந்தை என பிஸியான உடன் கணவர் இரண்டாம் பட்சமாக மாறியிருப்பார். இதுதான் குடும்பத்தில் குழப்பம் வந்து கும்மியடிக்க காரணமாகிவிடும். அதிகமாக வேண்டாம். தினசரி படுக்கை அறையிலாவது காதோரம் போய் ஐ லவ் யூ சொல்லுங்கள். அதிலேயே சரண்டர் ஆகிவிடுவார் உங்கள் கணவர்.
பணி சூழலில் அவர் வெளியூர் செல்ல நேர்ந்தால் விட்டது தொல்லை என்று கண்டும் காணாமல் விட்டு விடாதீர்கள். அவ்வப்போது ரொமான்ஸ் மெசேஜ் அனுப்புங்கள். வேலை நேரத்தில் தொந்தரவு செய்ய விரும்பாவிட்டாலும் உணவு இடைவேளை, இரவுப் பொழுதுகளிலாவது செல்பேசியில் பேசலாம். சம்பிரதாயமான பேச்சுக்களை விடுத்து நீங்கள் எவ்வளவு தூரம் அவருக்காக தவிக்கிறீர்கள் என்பதை உணர்த்துங்கள்.
அன்பும், நட்பும் ஆதரவாய் எங்கே கிடைக்கிறதோ அங்கே ஆண்களின் மனம் தடம் மாற வாய்ப்புள்ளது. எனவே நம் கணவர்தானே நம்மை விட்டு எங்கே போய்விடப்போகிறார்? என்று எண்ணாமல் வீட்டுப் பெரியவர்கள் கூறுவதைப் போல கணவரை முந்தானையில் முடிந்து வைத்துக்கொள்ளுங்கள். அதுதான் இருவருக்குமே பாதுகாப்பானது.