கொச்சியில் மெட்ரோ ரெயில்களில் சைக்கிள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. அதேபோல் சென்னையிலும் மெட்ரோ ரெயில்களில் சைக்கிள் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் ரெயில்களில் சைக்கிள் கொண்டு செல்ல அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:- மெட்ரோ ரெயில்களில் தற்போது பயணிகள் அதிகமாக வருவதால் சைக்கிள் கொண்டு செல்ல இடம் இல்லை. இதற்கு முன்பு சிறப்பு வகுப்புகளில் குறைவான பயணிகளே பயணம் செய்ததால் அதில் சைக்கிள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டது. தற்போது அந்த பெட்டி மகளிர் பெட்டியாக மாற்றப்பட்டுவிட்டது. எனவே சைக்கிள்கள் கொண்டு செல்ல இடவசதி இல்லை.
கொரோனா தொற்றுக்கு முன்பு மெட்ரோ ரெயிலில் தினமும் 1.16 லட்சம் பேர் பயணம் செய்தனர். தற்போது சராசரியாக தினமும் 2.20 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 67 லட்சம் பேர் பயணித்துள்ளனர். அதிகபட்சமாக ஏப்ரல் 28-ந்தேதி 2.7 லட்சம் பேர் பயணம் செய்து சாதனை படைத்து உள்ளனர். இதேபோல் மெட்ரோ ரெயில்களில் செல்லப் பிராணிகள் மற்றும் பறவைகளை கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமைக்கப்படாத இறைச்சி, மீன்களை எடுத்து செல்லவும் அனுமதி கிடையாது. எனவே பயணிகள் மெட்ரோ ரெயில் நிலையம் மற்றும் மெட்ரோ ரெயில்களுக்கு செல்லப்பிராணிகளை எடுத்து வர வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.