No results found

    இளைஞர்கள் திறனை வளர்த்து கொண்டால் வேலைவாய்ப்பை பெறலாம்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


    தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தொழில் பயிற்சி நிலைய பயிற்சியாளர்களுக்கு இடையான விளையாட்டுப் போட்டிகள் நேரு விளையாட்டு அரங்கத்தில் இன்று நடந்தது. போட்டியினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது:- வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்களை தொடர்ந்து நடத்தி எண்ணற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒரு லட்சமாவது பணி ஆணையை முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் சமீபத்தில் வழங்கினார். தற்போது அந்த எண்ணிக்கை 1,44,000 ஆக உயர்ந்து வருகிறது. விரைவில் 1.5 லட்சம் மற்றும் 2 லட்சம் என்ற எண்ணிக்கையை இது எட்டப் போகிறது.

    அதிக எண்ணிக்கையிலான பயிற்சி முகாம்கள் மூலம் ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டு வருகிறது. எனது தொகுதியான திருவல்லிக்கேணியில் மட்டும் பல நிகழ்ச்சிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னெடுத்து வருகிறார். இளைஞர்கள் திறன்களை வளர்த்துக் கொண்டால் மட்டுமே வேலைவாய்ப்பு என்ற விஷயத்தை பெற முடியும். இந்நிலையில் மாவட்ட அளவிலான என்ற நிலையை கடந்து ஐடிஐ மாணவர்களுக்கு மாநில அளவிலான போட்டி இன்று தொடங்கி வைக்கப்படுகிறது. 102 அரசு ஐடிஐ களில் 92 சதவீத மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. இது தமிழக வரலாற்றிலேயே மிகப்பெரிய சாதனை ஆகும். மாணவர்கள் உடல் ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டும் வகையில் மாநில மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்து வருகிறது. இதுவரை பள்ளி கல்லூரிகளில் மட்டுமே விளையாட்டு போட்டிகள் நடந்து வந்த நிலையில் முதல் முறையாக மாநில அளவில் ஐடிஐ மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி நடைபெறுவது மிக முக்கியமானது.

    விளையாட்டு போட்டிக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.50 கோடி ஒதுக்கி இருக்கிறார். விளையாட்டுத்துறை அமைச்சராக நான் பொறுப்பேற்றது முதல் இந்த நேரு ஸ்டேடியத்திற்கு வாரத்துக்கு மூன்று தடவை வந்து விடுகிறேன். இவ்வாறு அவர் பேசினார். பின்பு அணி வகுப்பில் பங்கேற்று முதலிடம் பெற்ற சென்னை மண்டல மாணவ மாணவிகளுக்கு கோப்பையை பரிசாக வழங்கினார். பின்பு கேரம் போர்டு, செஸ், இறகு பந்து விளையாடி மாணவ மாணவிகளை ஊக்குவித்தார் ஆணையாளர் வீரராகவராவ் வரவேற்றார். அரசு கூடுதல் செயலாளர் முகமது நசிமுதீன் திட்ட விளக்க உரையாற்றினார். நிகழ்ச்சியில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் சி.வி. கணேசன், அமைச்சர் சேகர்பாபு, தயாநிதி மாறன், எம்.பி, பரந்தாமன் எம் எல் ஏ ,மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், அரசு செயலாளர்கள் அதுல்ய மிஸ்ரா, மேகநாத ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Previous Next

    نموذج الاتصال