ஈமான் (இறையச்சம்), தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகிய ஐம்பெரும் கடமைகள் கொண்டது இஸ்லாம். இந்த கடமைகள் குறித்த விவரங்கள் உள்பட மனித வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்று திருக்குர்ஆன் விரிவாக எடுத்துரைக்கிறது. ஒரு முஸ்லிம் இந்த கடமைகளை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும், இஸ்லாமிய வழியில் மனித வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பதை நபிகள் பெருமகனார் முகம்மது நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டி, நமக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்கள். அவற்றை பின்பற்றி நடந்தால் நமது வாழ்க்கையும் வெற்றியாகும், நாமும் வெற்றியாளர்களில் ஒருவராக, பெரும்பாக்கியம் நிறைந்தவர்களாக இந்த உலகில் வாழ முடியும். அதுமட்டுமின்றி மறுமையிலும் நமது வாழ்க்கை சிறப்பாக அமையும் என்று நம்பிக்கை அளிக்கிறது திருக்குர்ஆன்.
இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: "மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம்". (திருக்குர்ஆன் 2:21.) "எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வுக்குப் பயந்து (அவனுக்கு மாறு செய்வதை விட்டு) விலகிக் கொண்டார்களோ அத்தகையவர்தாம் நிச்சயமாக பெரும் பாக்கியம் பெற்றவர்கள்". (திருக்குர்ஆன் 24:52) அல்லாஹ் மீது நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்து வந்தால் அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இறைவன் திருக்குர்ஆனில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளான்:
"(மனிதர்களே!) உங்களில் எவரேனும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களையும் செய்து வந்தால், அவர்களுக்கு முன்னர் சென்றவர்களைப் பூமிக்கு அதிபதிகளாக்கியது போன்றே இவர்களையும் நிச்சயமாகப் பூமிக்கு அதிபதியாக்கி வைப்பதாகவும், அவன் விரும்பிய மார்க்கத்தில் இவர்களை உறுதியாக்கி வைப்பதாகவும், அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டு இவர்களுடைய பயத்தை மாற்றி விடுவதாகவும் நிச்சயமாக அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான். மேலும், அவன் தன்னையே வணங்கும்படியாகவும், யாதொன்றையும் தனக்கு இணையாக்கக் கூடாது என்றும் கட்டளையிட்டிருக்கின்றான். இதன் பின்னர், எவரேனும் நிராகரிப்பவர்களாகி விட்டால் நிச்சயமாக அவர்கள் பெரும் பாவிகள் தாம்". (திருக்குர்ஆன் 24:55).
"(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து (அவனுடைய) தூதரை (முற்றிலும்) பின்பற்றி வாருங்கள். நீங்கள் (இறைவனுடைய) அருளை அடைவீர்கள்" (திருக்குர்ஆன் 24:56). "பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் நீங்கள் உதவி தேடுங்கள். திண்ணமாக, தொழுகை ஒரு பாரமான செயல்தான்; ஆனால் இறைவனுக்கு அஞ்சி வாழ்கின்ற அடியார்களுக்கு அது பாரமான செயலே அல்ல" (திருக்குர்ஆன் 2:45). வெற்றிகரமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள இறைவன் நமக்கு காட்டியுள்ள இந்த வழிகளை பின்பற்றி வாழ்வோம், இறையருளைப்பெற்று இம்மையிலும் மறுமையிலும் நற்பலன்களைப்பெறுவோம், ஆமீன். பேராசிரியர் அ. முகம்மது அப்துல் காதர், சென்னை.