இளம் வயது முதலே மற்ற குழந்தைகளை போல வீண் விளையாட்டில் நபிகளார் ஈடுபடவில்லை. 'நான் இந்த உலகிற்கு விளையாட்டுக்காக வரவில்லை' என்றார்கள். இறைத்தேடலும், ஆழமான சிந்தனையும் கொண்ட நபிகளார், மக்கள் மத்தியிலே சிறந்த முறையில் வாழ்ந்து காட்டினார்கள். நபிகளாரின் இயல்பான குணமே பிறருக்கு உதவுவது தான். அதனால் தன்னிடம் கேட்பவர்களுக்கு, 'இல்லை' என்று சொல்லாமல், இருப்பதை கொடுக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தார்கள். அன்றைய மக்கள், நபிகளாரை 'அல் அமீன்' (நம்பிக்கைக்கு பாத்திரமானவர்), 'அஸ்ஸாதிக்' (சத்தியம் தவறாத உண்மையாளர்) என்றே போற்றினார்கள். 40 வது வயதில் தொடங்கி, நபிகளாருக்கு திருக்குர்ஆன் வேதம் படிப்படியாக இறக்கி அருளப்பட்டது. 'அல்லாஹ்' என்ற ஏகப் பரம்பொருள் குறித்து மக்கள் மத்தியிலே சன்மார்க்கப் பிரசாரம் செய்ததோடு, தன்னை இறைவனின் தூதர் என்றும் நபிகளார் பிரகடனப்படுத்தினார்கள்.
'மனிதர்கள் எல்லோரும் ஆதமுடைய மக்களே' என்றார்கள். இனத்தாலும், நிறத்தாலும், குலத்தாலும், வேற்றுமை பாராட்டும் தீண்டாமை போக்கிற்கு எதிராக போரிட்டு சமத்துவத்தை நிலை நாட்டினார்கள். ஆண்டியாக இருந்தாலும் அரசனாக இருந்தாலும் இறைவன் முன்பு அனைவரும் சமம் என்ற உயரியக் கோட்பாட்டை உலகில் நடைமுறை படுத்திக்காட்டினார்கள். பரிசுத்த இஸ்லாமிய மார்க்கத்தை நிலைநாட்ட பல இன்னல்களையும், துயரங்களையும் தாங்கி, சகித்துக் கொண்டு, சவால்களை பொறுமையுடன் எதிர்கொண்டு, அதில் இறையருளால் வெற்றி கண்டார்கள். எழுதப்படிக்கத் தெரியாத நபிகளார், நன்றாக படித்த பண்டிதர்களும் கூற முடியாத பல பேருண்மைகளை எல்லாம் உலகிற்கு எடுத்துக்கூறினார்கள். மக்கா, மதீனாவின் மன்னராக இருந்த போதும் எளிமையாக வாழ்ந்தார்கள்.
தனது 63-வது வயதில் இந்த உலகை விட்டு நபிகளார் மறைந்தாலும், அவர்களது சொல்லும், செயலும், நடைமுறைகளும், உலகெங்கும் அவர்களை பின்பற்றும் மனிதர்களின் மனங்களில் என்றும் மறையாமல் வாழ்ந்து கொண்டே இருக்கின்றது. இத்தகைய இவர்களது உயர்வு குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு பேசுகிறது: "(நபியே!) நாம் உம்முடைய இதயத்தை உமக்காக விரிவாக்கித் தரவில்லையா?. மேலும், உம்முடைய சுமையை உம்மைவிட்டு நாம் இறக்கிவைத்தோம். (அது) உம்முடைய முதுகை முறித்துக் கொண்டிருந்தது. மேலும், உமக்காக உம் புகழினை உயர்த்தினோம்". (திருக்குர்ஆன் 94:1-4) மு.முகம்மது சலாகுதீன், நெல்லை ஏர்வாடி.