இதற்காக தமிழகத்தில் மாவட்டம்தோறும் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் அனைத்து மாவட்ட தலைமை மன்றங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திலும் நமது மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள், வளர்ச்சி குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் மாவட்ட தலைவர்கள், அணி தலைவர்கள், நகரம், ஒன்றியம், பகுதி மற்றும் கிளை மன்ற நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ள உறுதி செய்து அதற்கு தேவையான தகுந்த இடத்தினை ஏற்பாடு செய்ய வேண்டும்.
இத்துடன் அனுப்பிய படிவத்தினை தாங்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள மாவட்டம், அணி, நகரம், ஒன்றியம், பகுதி மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு படிவத்தினை அளித்து பூர்த்தி செய்து அனைத்தையும் 15 நாட்களுக்குள் தயார் நிலையில் வைத்திருக்கவும். தங்கள் மாவட்டத்தின் ஆலோசனை கூட்டத்தில் நான் கலந்து கொள்ளும்போது என்னிடம் நேரில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆலோசனை கூட்டம் நடைபெறும் தேதி தளபதியின் அனுமதி பெற்று விரைவில் அறிவிக்கப்படும். ஆகவே அனைவரும் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த தகவலை பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் மற்றும் வேறு எந்த சமூக வலைதளங்களிலும் பகிர வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.