நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக புகார் எழுந்தது. இதற்கு காரணமான அம்பாசமுத்திரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து பல்வீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். பணி இடைநீக்க நடவடிக்கையும் அவர்மீது பாய்ந்தது. அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தற்போது இது தொடர்பாக விசாரணை நடக்கிறது. இதற்கிடையே, இந்த வழக்கு பற்றி ஐ.ஏ.எஸ்.அதிகாரி அமுதா தலைமையிலான உயர்மட்டக் குழுவும் விசாரணை நடத்தி வருகிறது. அந்த உயர்மட்டக் குழுவினர் இதுதொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி.போலீஸ் விசாரணைக்கு மாற்ற வேண்டும் என சிபாரிசு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் - சிபிசிஐடிக்கு வழக்கு மாற்றம்
Tamil News