டெல்லியில் அவர் பா.ஜ.க. மூத்த தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். சட்ட அமைச்சகம் உள்பட சில மத்திய அமைச்சக உயர் அதிகாரிகளுடனும் அவர் ஆலோசனை நடத்துவார் என்று தெரிய வந்துள்ளது. கவர்னர்கள் தங்கள் ஒப்புதலுக்கு வந்துள்ள மாநில அரசுகளின் மசோதாக்களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி இருந்தது. தற்போது தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வசம் தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட 17 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. அந்த மசோதாக்களுக்கு அவர் எப்போது ஒப்புதல் வழங்குவார் என்று தெரியவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் நிறைவு பெற்ற சட்ட கூட்டத்தொடரில் 16 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களும் கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளது. அந்த வகையில் கவர்னரின் ஒப்புதலை பெற 30-க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகும். எனவே இது தொடர்பாக கவர்னர் டெல்லியில் மூத்த அதிகாரிகளிடம் விவாதிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. டெல்லியில் வழங்கப்படும் ஆலோசனைக்கு ஏற்ப கவர்னர் ரவி முடிவுகளை மேற்கொள்வார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே சமீபத்தில் தி.மு.க. தலைவர்கள் மீது பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டுகளை வெளியிட்டார். இது தொடர்பான ஆவணங்களை பா.ஜ.க.வினர் கவர்னரிடம் கொடுத்துள்ளனர். தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோக்களை 2 தடவை பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். அந்த 2 ஆடியோக்களும் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. இது தொடர்பாகவும் டெல்லியில் உள்ள அதிகாரிகளிடம் கவர்னர் ரவி ஆலோசிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் கவர்னரின் டெல்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.