தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், "விருத்தாசலத்தில் படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த பள்ளியின் உரிமையாளரான தி.மு.க. கவுன்சிலர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். எடப்பாடி பழனிசாமி பேசுவதை நேரலை செய்யாததால் அதிருப்தி அடைந்த அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் பேசும்போது நேரலை செய்யப்படுவதில்லை என்று குற்றம் சாட்டினார். அதன்பின்னர் சட்டசபையில் நேரலை தொடர்பாக காரசாரமாக விவாதம் நடைபெற்றது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, நான் பேசுவதை நேரலை செய்வதில் என்ன பிரச்சனை? என கேள்வி எழுப்பினார். அப்போது சபாநாயகர் அப்பாவு பேசும்போது, நேரலை வழங்குவதில் உள்நோக்கம் எதுவும் இல்லை என்றும், சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெறும் கவன ஈர்ப்புகள் இனி நேரலை செய்யப்படும் என்றும் அறிவித்தார்.
தமிழக சட்டசபையில் இனி கவன ஈர்ப்பும் நேரலை செய்யப்படும்- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
Tamil News