விழாவின் சிகர நிகழ்ச்சியான பொங்கல் வழிபாடு நேற்று நடைபெற்றது. காலை 10.15 மணிக்கு கோவிலின் பிரதான பந்தலில் வைக்கப்பட்டு இருந்த பண்டார அடுப்பில் தலைமை பூஜாரி தீ மூட்டி பொங்கல் வழிபாட்டை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கோவிலை சுற்றி 3 கி.மீ தூரத்திற்கு பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். ஜெர்மனி போன்ற வெளிநாட்டு பெண்கள் உள்பட லட்சக்கணக்கான பெண்கள் இந்த பொங்கல் வழிபாட்டில் பங்கேற்றனர். பிற்பகல் 2.15 மணிக்கு அம்மனுக்கு பொங்கல் நிவேத்தியம் செய்யப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் எம். ராதாகிருஷ்ணன் நாயர், செயல் தலைவர் எம்.விக்ரமன் நாயர், செயலாளர் பார்கவன் நாயர், பொருளாளர் மணிகண்டன் நாயர், துணைத் தலைவர் சங்கரதாசன் நாயர், இணைச் செயலாளர் சிவகுமார் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்து இருந்தனர். பொங்கல்வழிபாட்டையொட்டி கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ் வசதி செய்யப்பட்டு இருந்தது. பாதுகாப்பு பணியில் 300 போலீசார் ஈடுபட்டனர்.
கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் கரிக்ககம் ஸ்ரீசாமுண்டி தேவி கோவிலும் ஒன்றாகும். பல்வேறு வேண்டுதல்களுடன், இங்கு வந்து வழிபடும் பக்தர்களுக்கு கேட்ட வரம் தரும் புண்ணியஸ்தலமாக கரிக்ககம் ஸ்ரீசாமுண்டி தேவி கோவில் விளங்குகிறது. இந்த கோவில் திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலில் இருந்து வடமேற்கு திசையில் 7 கிலோ மீட்டர் தொலைவில் பார்வதி புத்தனாற்றின் கரையில் அமைந்துள்ளது. 600 வருடங்களுக்கும் மேல் பழமையான இந்த கோவிலில் 2023-ம் ஆண்டுக்கான பொங்கல் திருவிழா கடந்த 27-ந் தேதி தொடங்கியது.