No results found

    அருணாசலேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நாளை தொடங்குகிறது


    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு அன்று காலை 10.30 மணிக்கு மேல் பகல் 12 மணிக்குள் சாமி சன்னதியில் சாமிக்கும், அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. முன்னதாக கோவிலில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது. அன்று இரவு 8 மணி அளவில் கோவிலின் 3-ம் பிரகாரத்தில் உள்ள கொடிமரம் முன்பு சாமியும், அம்மனும் எழுந்தருளி மாலை மாற்றும் வைபவம் நடைபெறும்.

    இரவு 11 மணி அளவில் திருக்கல்யாண மண்டபத்தில் உற்சவர் திருக்கல்யாணம் நடைபெறும். தொடர்ந்து நள்ளிரவு 12 மணி அளவில் சாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாடவீதி உலா வருகின்றனர். அதனைத்தொடர்ந்து 5-ந் தேதி இரவு 8 மணி அளவில் கீழ்நாத்தூரில் மருவுண்ணல் மண்டகப்படி நிகழ்ச்சியும், 6-ந் தேதி இரவு கோவிலில் திருக்கல்யாண மண்டபத்தில் நலங்கு உற்சவம் நடக்கிறது. மறுநாள் 7-ந் தேதி காலையில் திருக்கல்யாண மண்டபத்தில் ஹோமம் மற்றும் இரவு ஊஞ்சல் உற்சவமும், 8-ந் தேதி காலை ஹோமம் மற்றும் இரவு ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது.

    9-ந் தேதி பகல் 12 மணிக்கு தாமரை குளத்தில் பாலிகை விடுதல் நிகழ்ச்சியும், தாமரைக்குளம் ராஜா மண்டபத்தில் அபிஷேகமும் மாலையில் குமர கோவிலில் மண்டப படியும் நடக்கிறது. அன்று இரவு காமாட்சி அம்மன் கோவில் தெரு வழியாக சாமி வீதி உலாவும் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அலுவலர்கள் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர். கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் ஏகாம்பரேஸ்வரர், காசி விஸ்வநாதர் ஆகிய கோவில்களில் வருகிற 4-ந் தேதி மாலை 5 மணிஅளவில் பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடக்கிறது. மாலை 5 மணிஅளவில் சீர்வரிசை நிகழ்ச்சி, மாலை 6 மணிஅளவில் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. இரவு 7.30 மணிஅளவில் பஞ்ச மூர்த்திகளுடன் சாமி திருவீதி உலாவும் நடக்கிறது.

    Previous Next

    نموذج الاتصال