அதன்படி கடந்த 10-ந்தேதி அம்பை தாலுகா அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அமுதா தலைமையில் விசாரணை நடந்தது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் இருந்து யாரும் ஆஜராகவில்லை. இந்நிலையில் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்களும் விசாரணை அதிகாரி அமுதா தலைமையில் மீண்டும் 2-ம் கட்ட விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இன்று காலை 10 மணிக்கு அம்பை தாலுகா அலுவலகத்தில் வைத்து அதிகாரி அமுதா தலைமையில் விசாரணை தொடங்கியது. இதற்காக அவர் நேற்று இரவு சென்னையில் இருந்து நெல்லை வந்தடைந்தார். இன்று காலை விசாரணை தொடங்கியதையொட்டி தாலுகா அலுவலகம் போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
தொடர்ந்து, பல் பிடுங்கிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சூர்யாவின் தாத்தா பூதப்பாண்டி ஆஜாராகி விளக்கமளிக்க தாலுகா அலுவலகத்திற்கு வந்தார். மேலும் வி.கே.புரம் பகுதியை சேர்ந்த அருண்குமார், அவரது தாயார் ராஜேஸ்வரி மற்றும் 16 மற்றும் 17 வயதுள்ள 2 சிறுவர்கள் என 5 பேர் தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் 5 பேரும் விசாரணை அதிகாரி முன்னிலையில் ஆஜராகினர். அமுதா ஐ.ஏ.எஸ். விசாரணை நடத்தி வரும் அம்பை தாலுகா அலுவலகம் வருவாய் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. விசாரணைக்கு வருபவர்கள் காவல்துறைக்கு எதிரான குற்றச்சாட்டுகளை கூறலாம் என்பதால், தாலுகா அலுவலகத்தில் உளவுப்பிரிவு போலீசார் உள்ளிட்ட அனைத்து காவலர்களையும் தாலுகா அலுவலகத்தில் இருந்து வெளியேற்றுமாறு வருவாய் துறையினருக்கு உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.