ஜோதிட ரீதியாக ஒருவரின் புத்திர பாக்கியத்தை புத்திரக்காரகரான குருவும் ஐந்தாமிடமெனும் பூர்வ புண்ணிய ஸ்தானமும் ஒன்பதாமிடமெனும் பாக்கிய ஸ்தானமுமே தீர்வு செய்கிறது. குழந்தை பாக்கியத்தை தடை செய்வதற்கான சில முக்கிய கிரக அமைப்புகளை காணலாம். ஜன்ம லக்னம், ராசி மற்றும் 5-ம் இடத்தை சனி பார்ப்பது. ஐந்தாம் அதிபதி அல்லது 5ல் நின்ற கிரகம் தனித்து புதன் வீட்டில் நின்று பாவகிரகங்களின் சம்பந்தம் பெறுவது. 7-ல் சனி, 8-ல் செவ்வாய், 5-ல் கேது நிற்பது. 9-ல் சூரியன் செவ்வாய் இணைந்து சனி 11-ல் அமர புத்திர தோஷம் ஏற்படும். 1,5,8,12-ல் சனி, செவ்வாய் இணைவு பெறுவது புத்திர தோஷம். ஐந்தாம் இடத்தில் சூரியன் இருந்து செவ்வாய் பார்த்தால் கருச்சிதைவு உண்டாகும். ஐந்து, ஒன்பதாம் அதிபதிகள் கேதுவுடன் சம்பந்தம் பெறுவது.
ஆண், பெண்ணின் 5, 9-ம் அதிபதிகளுக்கு தொடர்பின்மை. குரு புதன் வீடான மிதுனம், கன்னியில் இருந்தால் தாமத புத்திர பாக்கியம். 5,8-ம் அதிபதிகள் அல்லது 5,12-ம் அதிபதிகள் பரிவர்தனை பெற்று குரு பலமில்லாமல் இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும். 9-ம் அதிபதி 12-ல், 5-ம் அதிபதி 6-ல் நின்று புத்திர தோஷம் ஏற்படும். 5-ம் அதிபதி 6,8,12-ம் அதிபதிகளுடன் சம்பந்தம் பெறுவது கருச்சிதைவை ஏற்படுத்தும். 5-ம் இடத்தில் நீச்சம் பெற்ற கிரகம் இருக்க கூடாது. குரு மற்றும் ஐந்தாம் அதிபதிக்கு திதி சூன்ய பாதிப்பு பெறுதல் 5-ம் பாவகத்தோடு சம்பந்தம் பெறும் செவ்வாய், ராகு கருக்கலைப்பை ஏற்படுத்தும்.
ஐந்தாம் அதிபதியும் குருவும் பலவீனமடைந்தால் புத்திர தடை; ஐந்தாம் இடத்தில் குரு இருந்தால் தாமதமாக குழந்தை பிறக்கும். குரு லக்ன பாதகாதிபதி சம்பந்தம் பெறுவது, குரு வக்ரம், அஸ்தங்கம் அடைதல். செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகத்தை செவ்வாய் தோஷம் இல்லாத ஜாதகத்துடன் இணைப்பது. ராகு/கேது தோஷம் உள்ள ஜாதகத்தை ராகு/கேது தோஷம் இல்லாத ஜாதகத்துடன் இணைப்பது. ஆண், பெண் ராசி சஷ்டாஷ்டகமாக அமைவது, குடியிருக்கும் வீட்டில் வடகிழக்கு பாதிப்பது. மேலும் ஒருவருடைய ஜாதகத்தில் 5-ல் ராகு, கேது இருப்பதும், கிரகச் சேர்க்கையில் சூரியன்+ ராகு, சூரியன்+ சனி, சந்திரன்+ ராகு, சனி+ராகு, செவ்வாய்+ராகு, செவ்வாய் +கேது இருந்தாலும், அந்த ஜாதகருக்கு சர்ப்பதோஷம் ஏற்பட்டு, அதனால் குழந்தை பாக்கியம் உரிய காலத்தில் கிடைக்காமல் தடை ஏற்படும். குழந்தை பாக்கியம் தாமதமாக கிடைத்தாலும் குழந்தையால் பிரச்சினை, பாதிப்பு , பயன்இல்லாத நிலை ஏற்படும். குழந்தை குறித்த கவலையும் இருக்கும்.
சிலரின் ஜாதகத்தில் 5,9-ம்மிடம் பலம் பெற்று 10-ம்மிடம் பலம் குறைந்தாலும் புத்திர பாக்கியம் இருக்காது. ஏனென்றால் பத்தாமிடம் தான் கர்மஸ்தானம். கர்மம் செய்ய பிள்ளைகள் நிச்சயமாக உண்டா, இல்லையா என்பதை பத்தாமிடமான கர்மஸ்தானமே நிர்ணயம் செய்கிறது. தாய், தந்தையை அடிப்பது, கொடுமைப்படுத்துவது, அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பது போன்ற பாவச் செயல்களை செய்பவர்களின் ஜாதகத்தில் பத்தாமிடம் பாதித்து கர்மம் செய்ய புத்திர பாக்கியம் இல்லாத அமைப்பை ஏற்படுத்தும். திருமண பொருத்தமும் புத்திர பிராப்தமும் குழந்தை பிறப்பிற்கு ஆண், பெண் என இருவரின் பங்களிப்பும் சமவிகிதத்தில் இருக்க வேண்டும். ஆண், பெண் இருவருக்கும் திருமணத்தின் மூலம் குழந்தை பிறப்பிற்கான தொடக்கப் புள்ளி வைக்கப்படுகிறது. திருமண பொருத்தத்தின் போதே, ஜாதகத்தில் குழந்தை பாக்கியத்தில் பிரச்சினை உள்ளதா என்பதை உறுதியாக அறிய முடியும்.திருமண பொருத்தத்தின் போது புத்திர தோஷ ஜாதகத்திற்கு புத்திர தோஷம் இல்லாத ஜாதகத்தை பொருத்த வேண்டும். ஆண் ஜாதகத்தில் புத்திர தோஷம் இருந்து பெண் ஜாதகத்தில் புத்திர தோஷம் இல்லாமல் இருந்தால் குழந்தை பேறு அமைவது கடினம். ஆண் ஜாதகத்தில் புத்திர தோஷம் இல்லாமல் பெண் ஜாதகத்தில் புத்திர தோஷம் இருந்தால் காலம் தாழ்த்திய புத்திர பாக்கியம் கிடைக்கும். குழந்தை பாக்கியத்தை தீர்மானம் செய்யும் மகேந்திரப் பொருத்தமும், ரஜ்ஜு பொருத்தமும் மிக மிக முக்கியம் சந்திரனின் நட்சத்திரமான ரோகினி, ஹஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்களையும் ராகுவின் நட்சத்திரமான திருவாதிரை, சுவாதி, சதயத்தை இணைக்க கூடாது. சூரியனின் நட்சத்திரமான கிருத்திகை, உத்திரம், உத்திராடத்தில பிறந்தவர்களையும் குருவின் நட்சத்திரமான புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களையும் இணைக்க கூடாது. சுக்கிரனின் நட்சத்திரமான பரணி, பூரம், பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களையும் சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களை இணைக்க கூடாது. கேதுவின் நட்சத்திரமான அசுவினி, மகம், மூலத்தில் பிறந்தவர்களை புதனின் நட்சத்திரமான ஆயில்யம், கேட்டை, ரேவதியில் பிறந்தவர்களை இணைக்க கூடாது. மேலே கூறியவைகள் எல்லாம் ஒரே பகுப்புடைய நட்சத்திரங்கள். ஒரே பகுப்புடைய நட்சத்திரங்கள் என்பதால் இல்லற இன்ப குறையையும் தம்பதிகளிடையே இணக்கத்தையும் குறைக்கும். குரு ராகுவும் குழந்தை பாக்கியமும். நவகிர கங்களில் ஒரு மனிதருக்கு புத்திரப் பேறு அளிக்கும் சக்தி வாய்ந்த கிரகமாக குருபகவான் இருக்கிறார். சிலருக்கு ஜாதகத்தில் இந்த குரு பகவானால் புத்திர தோஷம் ஏற்பட்டு குழந்தை பிறக்காத நிலை உண்டாகிறது. அதே போல் செயற்கையை குறிக்கக் கூடிய கிரகம் ராகு. உலகில் செயற்கை முறையில் உருவாகும் அனைத்துப் பொருட்களும் ராகுவின் ஆதிக்கம் பெற்றவை. ராகுவின் தயவு இல்லாமல் எந்தப் பொருளையும் செயற்கை முறையில் எதையும் உருவாக்க முடியாது. குரு என்றால் குழந்தை. ஒருவரின் சுய ஜாதகத்தில் ராகு/கேதுவிற்கு நெருக்கமாக அல்லது ராகு/கேது அச்சிற்கு வெளியே குரு நின்றால் திருமணத்தில் தடை அல்லது திருமணத்திற்கு பின் குழந்தையின்மையைத் தருகிறது. கோட்சாரத்தில் குரு, ராகு சம்பந்தம் ஏற்படும் காலங்களில் செயற்கை கருத்தரிப்பு முறையில் அல்லது மருத்துவ உதவியுடன் அதிக குழந்தைகள் பிறக்கும். திருமணத்திற்குப் பின் குழந்தை இல்லாத காரணத்தால் ஏற்படும் பிரிவினைகளுக்கு குரு, ராகு முக்கிய காரணமாகிறது. குழந்தை நல்ல நிலையில் உருவாக காரணமாக குரு இருப்பதால் குழந்தை பிறக்காமல் இருத்தல் அல்லது பிறந்த குழந்தையை வளர்க்க முடியாமை, கால தாமத புத்திர பாக்கியம், குழந்தை பாக்கிய மின்மை, குழந்தைகளால் விரயம், பொருளாதார இழப்பு, குழந்தைகளால் மன வேதனைப்படும் நிகழ்வுகள் மிகுதியாகும். சிலருக்கு செயற்கை கருத்தரிப்பு முறையில் வாரிசு உருவாகும். சிலருக்கு அடிக்கடி கரு உருவாகி கலையும். சென்ற ஜென்மத்தில் கருக்கலைப்பு, பண ஏமாற்றம் மற்றும் குரு துரோகம், பசுவதை செய்தவர்களுக்கு இது போன்ற வினைப் பதிவு இருக்கும். ஜோதிட ரீதியாக ஆண் பெண் ஜாதக பாதிப்பும் மருத்துவ உதவியும். ஆணின் ஜாதகத்தில் சுரப்பிகளுக்கு காரக கிரகமான சுக்ரன் நீசம் அஸ்தமனம் பெற்று இருந்தால் அல்லது சுக்ரன் ராகுவுடன் நெருக்கமாக கிரகணப்படுத்தப்பட்டால் குழந்தை பிறப்பு தாமதமாகும். வீரிய ஸ்தானமான மூன்றாமிடத்திற்கு சனி, செவ்வாய் சம்பந்தம் இருந்தால் மருத்துவ உதவி தேவைப்படும். பெண்ணின் ஜாதகத்தில் எட்டாம் பாவகம் எனப்படும் அடிவயிறு கர்ப்பப்பை ஸ்தானம் பாதிக்கப்பட்டால் மருத்துவ உதவி தேவைப்படும். பெண்ணின் மாதவிடாய்க்கு காரக கிரகமான செவ்வாய் பாதிக்கப்பட்டால் மாதவிடாய் சுழற்சியில் பிரச்சினை ஏற்படும். பெண்கள் ஜாதகத்தில் ஐந்தாமிடத்திற்கு சர்ப்ப கிரக சம்பந்தம் இருந்தால் அடிக்கடி கருக்கலையும் அல்லது கருதங்காது. அடிவயிறு மற்றும் கர்ப்பப்பை ஸ்தானத்தை குறிக்கும் 8,9-ம் பாவகத்திற்கு, சனி செவ்வாயின் தொடர்பு ஏற்பட்டால், பிசிஓடி எனப்படும் நீர்க்கட்டி, தைராய்டு பிரச்சினை கண்டிப்பாக இருக்கும். சிலருக்கு மருந்துகளின் பக்க விளைவால் உடல்பருமன், கருத்தரிப்பில் தாமதம் ஏற்படும் கிரகங்கள் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை பொறுத்து, இயற்கையான அமைப்பில் குழந்தை பேறு ஏற்படுமா? அல்லது செயற்கை கருத்தரிப்பு முறை எனப்படும் மாற்று வழியில் தான் குழந்தை பிறக்குமா? என்பதை கண்டறிய இயலும். பெண்களுக்கு கரு முட்டை வளர்ச்சியை சீர் செய்ய செயற்கை கருத்தரிப்பு மையங்கள் வழங்கும் மெட்மோர்மின் எனும் மாத்திரை இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்தும். பெண்களை சர்க்கரை நோயாளியாக்கி விடுகிறது. அதனால் மன உளைச்சல், பண விரயம் ஏற்படுவதுடன் சர்க்கரை நோயும் வந்து விடும். இயற்கை முறையோ செயற்கை முறையோ பிரபஞ்ச சக்தி அனுமதிக்காமல் உயிரை உருவாக்க முடியாது. பிரபஞ்ச சக்தியை மிஞ்சிய சக்தி மனிதனுக்கு இருந்தால் செயற்கை கருத்தரிப்பு மையத்தை நாடும் எல்லோருக்கும் குழந்தை கிடைக்க வேண்டுமே. அதனால் கொடுக்கும் சக்தி பிரபஞ்சம் எனும் கால பகவானால் மட்டுமே சாத்தியம் என்ற நிலையில் குழந்தை பாக்கியத்திற்காக ஏங்குபவர்கள் குழந்தை பிறக்கும் காலம் அறிந்து மருத்துவ உதவியை நாடினால் கால நேரம் வீணாகாது. தேவையற்ற பண விரயத்தை தடுக்க முடியும். உடல் நலம் காக்கப்படும். செயற்கை முறை கருத்தரிப்பும் குரு ராகுவும் கோட்சாரத்தில் 22.4.2023 முதல் 30.10.2023 வரை குருவும் ராகுவும் சேர்ந்து இருப்பதால் மேஷம், சிம்மம், துலாம், தனது ராசி, லக்னத்தினருக்கு செயற்கை கருத்தரிப்பு முறை பயன் தரும் வாய்ப்புள்ளது. மேலும் சுய ஜாதக ரீதியான கோட்சார குருவை சுய ஜாதக ராகு தொடர்பு கொண்டாலும், சுய ஜாதக ராகுவை கோட்சார குரு தொடர்பு கொண்டாலும் செயற்கை முறை கருத்தரிப்பு பலன் தரும். மேலும் அஷ்டமச் சனி, ஏழரைச் சனி அர்தாஷ்டமச் சனி, அஷ்டம குருவால் பாதிப்பு இருப்பவர்கள் சுய ஜாதக தசாபுத்தி அறிந்து செயல்படுவது நல்லது. பரிகாரம் குழந்தை பாக்கியத்தில் தடை, தாமதம் இருப்பவர்கள் திருச்செந்தூர் சென்று கடலில் நீராடி முருகனை தரிசித்து வரவும்.