No results found

    தமிழ் புத்தாண்டையொட்டி ராமேசுவரம் கோவிலில் வாசித்த பஞ்சாங்கத்தில் அதிர்ச்சி தகவல்கள்


    அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு அன்று கோவிலின் சோமாஸ்கந்தர் சன்னதி எதிரே வைத்து பஞ்சாங்கம் படிப்பது வழக்கம். அதன்படி நேற்று தமிழ் புத்தாண்டையொட்டி பஞ்சாங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து ராமநாதபுரம் சமஸ்தானம் பஞ்சாங்கம் உள்ளிட்ட பஞ்சாங்கங்கள் வாசிக்கப்பட்டன. சஞ்சீவி பட்டர் வாசித்தார். பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் வருமாறு:- இந்த ஆண்டு உலகில் பல அதிசயங்கள் நிகழும். இந்தியா தனது சொந்த முயற்சியில் புதிய தொழில்நுட்பங்களின் மூலம் பல அரிய சாதனைகளை படைக்கும். வங்கிகளில் திடீர் பண பற்றாக்குறை ஏற்பட்டு நிவர்த்தி ஆகிவிடும். பணவிரயம் ஏற்படும். உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் உணவு பஞ்சமின்றி கிடைக்கும். விளையாட்டு வீரர்கள் பல தங்கப்பதக்கங்களை பெறுவர்.

    ஜவ்வாது, சதுரகிரி, மேகமலை, மூணாறு போன்ற பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்படும். இந்த ஆண்டு கம்பளி, நூல் ஆடை, ஆபரணங்கள் விலை உயரும். பால் உற்பத்தி கடுமையாக பாதிக்கும். கோழிகளுக்கு புதிய வகை நோய் உருவாகும். இதனால் கோழிகள் இறக்க நேரிடும். சந்தைகளில் கோழிகளின் விலை உயரும். புதிய வகை விஷக்காய்ச்சல் அதிகமாக பரவும். அரசு உயர் பதவிகளில் வகிப்பவர்களுக்கு பல நெருக்கடிகள் உண்டாகும். ரசாயன பொருட்கள் உற்பத்தி கடுமையாக பாதிக்கும். சன்னியாசிகள், மடாதிபதிகள் ஆகியோருக்கு அரசாங்கத்தால் பல தொல்லைகள் ஏற்படும். மழை அதிகளவு பெய்து மழை நீரானது ஆற்று வழியாக கடலில் கலக்க நேரிடும். குறிப்பாக வட மாநிலங்கள் மழை வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்படும். பஞ்சாப், பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும். பல நிறுவனங்களை அரசாங்கம் தனியார்மயமாக்க நேரும். மின்சார பொருட்களின் விலை உச்சத்தை தொடும். பட்டாசு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் உள்ளிட்ட பல அதிர்ச்சி தகவல்களும் பஞ்சாங்கத்தில் இடம் பெற்றுள்ளன. பஞ்சாங்கம் வாசிக்கப்பட்ட பின்னர் சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.. இந்த பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சியில் கோவிலின் ஆய்வாளர் பிரபாகர், பேஷ்கார்கள் கமலநாதன், அண்ணாதுரை, இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, பா.ஜ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Previous Next

    نموذج الاتصال