No results found

    நீதித்துறைக்கு எதிரான கருத்து: லலித் மோடி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும்- உச்ச நீதிமன்றம் உத்தரவு


    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்திய லலித் மோடி மீது ஊழல் மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டு உள்ளது. நிதி முறைகேடுகள் மற்றும் குற்ற வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் அவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுவிட்டார். தற்போது அவர் லண்டனில் வசிக்கிறார். இந்திய புலனாய்வு விசாரணை முகமைகளால் தேடப்படும் பட்டியலில் அவர் வைக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில் லலித் மோடி சமீபத்தில் தனது சமூக வலைத்தள பதிவுகளில் நீதித்துறைக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லலித் மோடியின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எம். சிங்வி தனது வாதத்தை முன்வைத்தார்.

    அப்போது, லலித் மோடிக்கு எதிராக நீதிபதிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். நீதித்துறைக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக லலித் மோடி சமூக வலைத்தளங்கள் மற்றும் தேசிய நிளிதழ்ளில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். லலித் மோடி சட்டத்திற்கு மேலானவர் அல்ல என்று கூறிய நீதிபதிகள், இதுபோன்ற செயல்கள் மீண்டும் நடந்தால் மிகவும் தீவிரமாக கருதி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். நீதித்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், எதிர்காலத்தில் இதுபோன்ற பதிவுகள் எதுவும் வெளியிடப்பட மாட்டாது என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

    Previous Next

    نموذج الاتصال