No results found

    மகாராஷ்டிரா அரசு 15 நாளில் கவிழும்: சஞ்சய் ராவத்


    மகாராஷ்டிராவில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு பின்பு முதல்-மந்திரி பதவி போட்டியால் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி உடைந்தது. இதைத்தொடர்ந்து சிவசேனா கொள்கை முரண்பாடு கொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து மகா விகாஸ் அகாடி என்ற கூட்டணியை அமைத்து ஆட்சியை கைப்பற்றியது. உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி ஆனார். ஆனால் இந்த கட்சியால் 2½ ஆண்டுகள் மட்டுமே ஆட்சியில் இருக்க முடிந்தது. சிவசேனா கட்சியின் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பால் உத்தவ் தாக்கரே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன், பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து ஏக்நாத் ஷிண்டே முதல்-மந்திரி ஆனார்.

    துணை முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றார். அதுமட்டும் இன்றி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி சட்டப்போராட்டத்தின் மூலமாக சிவசேனா கட்சி பெயர் மற்றும் சின்னத்தையும் கைப்பற்றியது. இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவுக்கு தாவ உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இந்த தகவலால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது. இந்தநிலையில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்து இருக்கிறோம். இந்த வழக்கில் நீதி வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம். தற்போது முதல்-மந்திரி அவரின் 40 எம்.எல்.ஏ.க்களின் ஆட்சி அடுத்த 15-20 நாட்களில் கவிழும். இந்த அரசுக்கான சாவு மணி தயாராக உள்ளது. யார் மணியை அடிக்க வேண்டும் என்பது தான் முடிவு செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். ஏக்நாத் ஷிண்டே அரசு கடந்த பிப்ரவரி மாதமே கவிழ்ந்துவிடும் என ஏற்கனவே சஞ்சய் ராவத் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    Previous Next

    نموذج الاتصال