அதற்கேற்ப கட்சியிலும் பல்வேறு நிர்வாகிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இவர்களை தேர்தல் பணியாற்றுமாறு அறிவுறுத்தி உள்ளார். அதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் பாராளு மன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகள் தொடங்கப்பட்டுவிட்டது. இதற்காக சென்னை, மதுரை, திருச்சி, கோவை, வேலூர் என 5 மண்டலங்களாக பிரித்து தேர்தல் பணிகளை மேற்பார்வையிட கட்சியின் மூத்த நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே 234 சட்டசபை தொகுதிக்கும் 234 பேரை பொறுப்பாளர்களாக நியமித்துள்ளதால் இவர்கள் ஒன்றியம், பகுதி வாரியாக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள்.
புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, பூத் வாரியாக திறமையான கட்சி நிர்வாகிகளை நியமிப்பது போன்ற பணிகளை செய்து வருகின்றனர். இப்போது 100 ஓட்டுக்கு ஒருவர் வீதம் கட்சியில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இவர்தான் அந்த 100 ஓட்டுகளையும் பற்றி முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று கூறி உள்ளனர். 100 ஓட்டில் தி.மு.க. ஓட்டு எவ்வளவு. அதில் அ.தி.மு.க. ஓட்டு எவ்வளவு. மற்ற கட்சி ஓட்டு எவ்வளவு. எந்த கட்சியையும் சாராத மக்கள் எவ்வளவு பேர் என்று பட்டியல் எடுத்து வருகின்றனர். இது மட்டுமின்றி ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 31 பேரை நியமித்துள்ளனர். அதில் இளைஞரணியினர் 10 பேர், மூத்த நிர்வாகிகள் 10 பேர், மகளிர் அணியினர் 10 பேர், தகவல் தொழில் நுட்ப அணியில் இருந்து ஒருவர் என 31 பேரை நியமித்து உள்ளனர். இது தவிர பூத் பொறுப்பாளர் என்று ஒரு வரையும் நியமிக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இதில் சில மாவட்டங்க ளில் 20 பேர் என்றும் சில மாவட்டங்களில் 31 பேர் என்றும் கட்சி நிர்வாகிகளை பொறுத்து நியமிக்கின்றனர். இவர்களது முழு முகவரி, செல்போன் நம்பர்கள் அனைத்தும் விவரமாக தயாரிக்கப்பட்டு மாவட்டச் செயலாளரிடம் புத்தகமாக அச்சிட்டு வழங்கி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தி.மு.க. வுக்கு தேர்தல் வியூகம் செய்து கொடுத்திருந்தார். அதன் அடிப்படையில் செயல்பட்டதால் தி.மு.க. ஆட்சியை பிடிக்க முடிந்தது என்று கட்சி நிர்வாகிகள் பெருமிதம் அடைந்தனர். ஆனால் இப்போது "பிரசாந்த் கிஷோர்" தி.மு.க. வுக்கு அரசியல் ஆலோசகராக செயல்படவில்லை. ஆனால் அவரிடம் தொகுதி வாரியாக வேலை பார்த்த நிர்வாகிகள் இப்போது தி.மு.க.வுக்கு பணியாற்றி வருகின்றனர். எனவே இவர்களை வைத்து பாராளுமன்ற தேர்தலை சந்திக்கலாம் என்று தி.மு.க. வியூகம் வகுத்து வருகிறது. பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டில் தி.மு.க. உறுதியாக உள்ளதால் அதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் எளிதாக வெற்றி பெற்று விடுவோம் என்று தி.மு.க.வினர் கூறி வருகின்றனர்.