No results found

    கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுடன் ஓபிஎஸ் அணியினர் சந்திப்பு


    கர்நாடகாவில் மே 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆளுங்கட்சியான பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுக, இந்த தேர்தலில் போட்டியிட விரும்புகிறது. கர்நாடகா தேர்தலில் சில இடங்களில் போட்டியிட அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், கர்நாடக முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பாவுடன் ஓபிஎஸ் அணியினர் சந்தித்தனர். ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி எடியூரப்பாவை சந்தித்து சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். எடியூரப்பாவிடம் தற்போதைய அரசியல் சூழலை எடுத்து கூறியதுடன், கர்நாடகா மாநிலத்தில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் தொகுதி ஒதுக்கீடு செய்ய கோரிக்கை வைத்துள்ளார். இதேபோல் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் கர்நாடக பாஜக தலைவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இடையே ஏற்பட்டுள்ள மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போதைய நிலையில், அ.தி.மு.க.வை எடப்பாடி பழனிசாமி அணியினர் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், ஓபிஎஸ் அணி நாங்கள்தான் உண்மையான அதிமுக என்று கூறி தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கர்நாடகா சென்று பாஜக தலைவர்களை சந்திப்பதற்குள், ஓபிஎஸ் அணியினர் முந்திக்கொண்டனர். இதன்மூலம் அதிமுக விவகாரம் கர்நாடக தேர்தலிலும் எதிரொலிக்கத் தொடங்கி உள்ளது.

    Previous Next

    نموذج الاتصال