இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இன்று (திங்கட்கிழமை) ஆணையர் அலுவலகத்தில் 2024-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் புதிய அறிவிப்புகள் குறித்தும், 2021-2022 மற்றும் 2022-2023-ம் நிதியாண்டுகளில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில் நிலுவையிலுள்ள பணிகளின் முன்னேற்றம் குறித்தும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு 2021-22-ம் ஆண்டில் 112 அறிவிப்புகளின் மூலம் 3,769 பணிகளும், 2022-23-ம் ஆண்டில் 165 அறிவிப்புகள் மூலம் 5,061 பணிகளும் மேற்கொள்ள அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
இந்த அறிவிப்புகளில் நிறைவேற்றப்பட்டவை தவிர்த்து, தற்போது நடைபெற்று வரும் இதர பணிகளை விரைந்து முடித்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும், 2023- 2024-ம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகளில் நமது பண்பாடு, கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் காலப்பெட்டகங்களாக திகழும் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான கோவில்களை பாதுகாத்திடும் வகையில் அவற்றை புனரமைக்கும் பணிகளுக்கும், கோவில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்கிடும் பணிகளுக்கும் முக்கியத்துவம் அளித்திட வேண்டுமெனவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.