மீனாட்சி-சுந்தரேசுவரர் கல்யாணத்தை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் கட்டண சீட்டு பெற வசதியாக இந்து சமய அறநிலையத்துறையின் https://hrce.tn.gov.in-திருக்கோவிலின் https://maduraimeenakshi.hrce.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் வருகிற 22-ந் தேதி முதல் 25-ந் தேதி இரவு 9 மணி வரை முன்பதிவு செய்யலாம். இதன் ஒரு பகுதியாக ரூ.500 கட்டண பதிவில் ஒருவர் 2 சீட்டுகள் மட்டுமே பதிவு செய்ய இயலும். ரூ.200 கட்டண பதிவில் ஒருவர் 3 சீட்டுகள் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஒரே நபர் ரூ.500, ரூ.200 கட்டணச் சீட்டுகள் இரண்டையும் பதிவு செய்ய இயலாது. 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் சீட்டு வாங்க வேண்டும். ஒரு பதிவிற்கு ஒரு கைபேசி எண் மட்டுமே பயன்படுத்த இயலும். எனவே ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் செய்ய இயலாது.
பக்தர்களின் வசதிக்காக கோவிலுக்கு சொந்தமான மேற்கு சித்திரை வீதி, பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கட்டணச் சீட்டு பெற விரும்பும் பக்தர்கள் ஆதார் கார்டு, போட்டோ அடை யாள அட்டை, கைபேசி எண் மற்றும் மின் அஞ்சல் முகவரி ஆகியவற்றுடன் முன்பதிவு செய்து கொள்ளலாம். இணைய தளத்தில் கூடுதல் விண்ணப்பங்கள் வந்தால், பக்தர்களுக்கு கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு நடத்தி உரிய நபருக்கு மின்னஞ்சல் அல்லது கைபேசி எண்ணிற்கு வருகிற 26-ந் தேதி தகவல் அனுப்பப்படும். உறுதி செய்யப்பட்ட மின்னஞ்சல்-குறுந்தகவல் கிடைக்க பெற்றவர்கள், வருகிற 27-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுரை மேற்கு சித்திரை வீதியில் உள்ள பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் உறுதி செய்யப்பட்ட தகவலை காட்டி, கட்டணச் சீட்டு தொகையை செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம். அதன் பிறகு வருபவர்களுக்கு கட்டணச் சீட்டு வழங்கப்பட மாட்டாது.
வெளியூரில் வசிக்கும் உறுதி செய்யப்பட்ட குறுந்தகவல் உடையவர்களுக்கு மட்டும் பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் அடுத்த மாதம் 1-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை கட்டணச் சீட்டு தரப்படும். மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 2-ந் தேதி காலை 5 மணி முதல் 7 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். ரூ.500 கட்டணச்சீட்டு பெற்றவர்கள் வடக்கு ராஜ கோபுரம், மொட்டை முனீ ஸ்வரர் சன்னதி அருகில் உள்ள வழியில் அனுமதிக்கப்படுவர். ரூ.200 கட்டணச்சீட்டு பெற்றவர்கள் வடக்கு சித்திரை வீதி, கிழக்கு சித்திரை வீதி சந்திப்பு அருகே உள்ள பாதை வழியாக வந்து வடக்கு ராஜ கோபுரம் வழியாக கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவர். திருக்கல்யாண கட்டணச் சீட்டு பெற்றவர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அமர்ந்து திருக்கல்யாண காட்சியைக் கண்டு அம்மன்-சுவாமி அருள் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.