இந்த நிலையில் 2024 ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதை ஜோ பைடன் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். கமலா ஹாரிசும் போட்டியிடுகிறார் இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "ஒவ்வொரு தலைமுறையும் ஜனநாயகத்திற்காக எழுந்து நிற்க வேண்டிய ஒரு தருணம் உள்ளது. அவர்களின் அடிப்படை சுதந்திரங்களுக்காக நிற்க வேண்டும். இதுவே நம்முடைய கொள்கை என்று நான் நம்புகிறேன். அதனால்தான் நான் அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறேன். எங்களுடன் சேருங்கள். வேலையை முடிப்போம்" என குறிப்பிட்டுள்ளார். அதேபோல் துணை ஜனாதிபதியான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். இது குறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "அமெரிக்கர்களாகிய நாம் சுதந்திரத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். நமது ஜனநாயகம் அதற்காகப் போராடுவதற்கான நமது விருப்பத்தைப் போலவே வலுவாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் ஜோ பைடன் மற்றும் நானும் மறுதேர்தலில் போட்டியிடுகிறோம்" என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இதில் குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். தேர்தலுக்கான பிரசாரத்தை அவர் ஏற்கனவே தொடங்கிவிட்டார். அதே சமயம் குடியரசு கட்சியின் சார்பில் டிரம்புக்கு போட்டியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கிஹாலே, விவேக் ராமசாமி களமிறங்கியுள்ளனர். இதனிடையே ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவார் என தகவல்கள் பரவி வந்தன. ஜோ பைடனும் மீண்டும் போட்டியிடுவதற்கான விருப்பத்தை தெரிவித்திருந்தார். எனினும் அதை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் இருந்து வந்தார்.