No results found

    தமிழ்நாட்டில் 5,784 ரேசன் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ்- ராதாகிருஷ்ணன் தகவல்


    மதுரை மாவட்டம் பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் இன்று கூட்டுறவு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில், 4 ஆயிரத்து 453 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் அடங்கும். கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு நிலைகளிலான வங்கிகளில் கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ. 71 ஆயிரத்து 950 கோடி மதிப்பீட்டில் வைப்புத் தொகை ஈட்டப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு மொத்தம் ரூபாய் 64 ஆயிரத்து 140 கோடி மதிப்பீட்டில் 17 விதமான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக, 17.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.13 ஆயிரத்து 443 கோடி மதிப்பீட்டில் வேளாண் கடனுதவிகளும், 1.59 இலட்சம் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு ரூபாய் 1 ஆயிரத்து 72 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளும், 2.86 லட்சம் கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு ரூபாய் 1 ஆயிர்த்து 339 கோடி மதிப்பீட்டில் கடனு தவிகள் வழங்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில் மொத்தம் 35,941 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் 26,018 முழுநேரக் கடைகளும், 9,923 பகுதிநேர கடைகளும் அடங்கும். கடந்த ஆண்டில் மட்டும் 5,784 நியாயவிலைக் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெறப்பட்டு உள்ளன. நடப்பாண்டில் கூடுதலாக 5 ஆயிரம் நியாய விலைக்கடைகளை புனரமைத்திடவும், கூடுதலாக 2 ஆயிரத்து 500 நியாயவிலைக் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்றிடவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வுகளின் போது கலெக்டர் அனீஷ் சேகர், இணை பதிவாளர்கள் குருமூர்த்தி (கூட்டுறவு சங்கங்கள்), பிரியதர்ஷினி (பாண்டியன் கூட்டுறவு பண்டகசாலை), மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்கு நர் ஜீவா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Previous Next

    نموذج الاتصال