No results found

    சொல்லாற்றல் வாய்ந்த நபித்தோழர்


    ஏக இறைவன் அல்லாஹ்வின் இறைத்தூதராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் வசித்த காலம் அது. அப்போது வாழ்ந்த மக்கள் தவறான வழிகளில் தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருந்தனர். அவர்கள் அனைவரையும் ஓரிறைக்கொள்கையின் பக்கம் சேர்க்க நபிகளார் பிரசாரம் செய்துகொண்டு இருந்தார். அப்போது, சுஹையில் இப்னு அம்ர் மக்காவின் குரைசியர் இன மக்களிடம் செல்வாக்கு மிக்கவராகவும், நாவன்மைமிக்க பேச்சாளராகவும் விளங்கினார். அபூயசீத் என்ற செல்லப்பெயரும் இவருக்கு உண்டு. இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு இவர் நபிகளாரின் ஏகத்துவக் கொள்கையினை மிகக் கடுமையாக எதிர்த்து நின்றவர். பத்ர் போரில் முஸ்லிம்களுக்கு எதிராக தீவிரமாக போரிட்டவர். பின்னர் அந்தப்போரில் இவர் போர்க்கைதியாகவும் பிடிக்கப்பட்டார்.

    கைதியாக இருந்த சுஹைலைக் கண்ட நபித்தோழர் உமர் (ரலி) அவர்கள் "இஸ்லாத்திற்கு எதிராக துஷ்பிரச்சாரம் செய்த சுஹைலின் முன்பற்களை உடைத்து விடவேண்டும்" என நபிகளாரிடம் அனுமதி கேட்டார்கள். ஆனால் அதற்கு அனுமதி தர மறுத்துவிட்ட நபிகளார், "உமரே! சுஹைலை விட்டு விடும். நான் எவரையும் சித்திரவதை செய்ய அனுமதிக்க மாட்டேன். ஒருகாலம் வரும் அப்போது சுஹைல் உங்கள் எல்லோரின் உள்ளங்களும் குளிரும்படியாக நடந்து கொள்வார்" என்று ஒரு முன்னறிவிப்புச் செய்தார்கள். புத்திக் கூர்மையும், சாதுரியமான சொல்லாற்றலும் வாய்ந்த சுஹைல் இஸ்லாத்தை ஏற்றிட வேண்டும் என்று நபிகளார் விரும்பினார்கள் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

    ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது குரைசிகளின் சார்பாக நபிகளாரிடம் பேச்சுவார்த்தை நடத்திட புதைல், உர்வா பின் மஸ்வூத் என சிலர் வந்தனர். ஆனால் அவர்களால் உடன்படிக்கையை நிறைவு செய்ய முடியவில்லை. அதனைத்தொடர்ந்து சுஹைல் பேச்சுவார்த்தைக்கு குரைசிகளால் அனுப்பி வைக்கப்பட்டார். தனது சாதுரியமான பேச்சுவார்த்தையினால் நபிகளாருடனான உடன்படிக்கையை நிறைவு செய்தார். அந்த உடன்படிக்கை குரைசிகளுக்கு சாதகமாகவும், முஸ்லிம்களுக்கு பாதகமாகவுமே அமைந்திருந்தது. இருந்தபோதிலும், சமூக நல்லிணக்கத்திற்காக நபிகளார் பெரிதும் விட்டுக்கொடுத்தே அந்த உடன்படிக்கையை ஏற்று அதன்படி நடந்து கொண்டார்கள்.

    குரைசிகள் சார்பாக அந்த ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டவரும் இந்த சுஹைல் இப்னு அம்ர் தான். விட்டுக்கொடுத்து நபிகளார் செய்த இந்த ஹுதைபிய்யா உடன்படிக்கையே, பிற்காலத்தில் இறையருளால் இஸ்லாத்தின் வெற்றிக்கு பெரிதும் உறுதுணையாக அமைந்தது. மக்காவின் வெற்றிக்குப் பின்னர் ஏகத்துவத்திற்கு எதிராக மூர்க்கத்தனமாக நடந்து கொண்ட குரைசிகளிடம் நபிகளார், "குரைசிகளே, நான் உங்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?" என்று வினவியபோது, அதற்கு பதில் தந்தவரும் இந்த சுஹைல் தான். "எங்களை நீங்கள் நல்லவிதமாக நடத்த வேண்டும். ஏனென்றால் நீங்கள் கண்ணியமான எங்களது சகோதரரின் மகன்" என்று நபிகளாரின் உள்ளத்தை தொடும்படியாக பேசினார். சகிக்க முடியாத கொடுமைகள் புரிந்த அந்த நிராகரிப்பாளர்களை தண்டிக்கும் வாய்ப்பு இருந்தும் கருணைக்கடலான நபிகளார் அவர்களை மன்னித்தார். அப்போது, "யூசுப் நபி தன் சகோதரர்களை மன்னித்ததை போன்று நானும் இன்று உங்களை மன்னித்து விட்டேன்" என்றார்கள்.

    இது உலகச் சரித்திரத்தில் மன்னிப்பின் மாண்பினை மனித குலத்திற்கு பறைசாற்றிடும் நபிகளாரின் வைர வரி வார்த்தைகளாகும். மேலும், இந்த வாசகம் "மன்னிப்பைக் கொண்டே இந்த உலகம் அமைதி அடையமுடியும்" என்பதை நமக்கு நினைவுபடுத்தித் தருவதாகவும் அமைந்துள்ளது. மக்காவின் வெற்றிக்கு பின் ஏற்கனவே இஸ்லாத்தை தழுவியிருந்த தனது மகன்களான அப்துல்லாஹ் மற்றும் அபூஜந்தல் ஆகியோரின் உதவியுடன் நபிகளாரை அணுகி சுஹைல் தனது 60 -ம் வயதில் நபிகளாரின் கரம் பற்றி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். குறுகிய காலமே நபிகளாருடன் இணைந்து செயல்பட்டாலும் சுஹைல் (ரலி) நபிகளாரின் மீது பேரன்பு கொண்டவராகவே விளங்கினார். நபிகளாரின் மறைவுக்குப் பின் மக்காவில் பலர் இஸ்லாத்தில் இருந்து வெளியேற முயன்ற போது அதனைத் தடுத்து நிறுத்தி, சுஹைல் (ரலி) அவர்கள் ஆற்றிய உரை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். மதம் மாற எண்ணம் கொண்டிருந்த மக்களிடையே அவர் இவ்வாறு பேசினார்: "இஸ்லாம் மார்க்கம் நபியின் மறைவுடன் ஓய்ந்து நின்று போய் விடவில்லை என்பதை அறிந்து கொள்ளுங்கள். அம்மார்க்கம் சந்திரனும் சூரியனும் தோன்றி, போகும் இடமெல்லாம் நீடித்து சென்றடையும் சத்திய மார்க்கமாகும்". இவ்வாறு அவர் உறுதியாகப்பேசி அந்த மக்களின் இதயங்களில் இஸ்லாத்தின் மீது ஈர்ப்பையும், உறுதியையும் ஏற்படுத்தினார். இது, நபிகளார் உமர் ரலியிடம் சுஹைல் (ரலி) பற்றி முன்னதாகச்சொன்ன முன்னறிவிப்பினை உண்மைப்படுத்துவதாக அமைந்தது. சொல்லாற்றல் வாய்ந்த நபித்தோழர் சுஹைல் இப்னுஅம்ர் (ரலி), இறுதிவரை தன்னை இறைவழியில் அர்ப்பணிப்புடன் தியாகம் செய்து மறைந்தார். மு.முகம்மது சலாகுதீன், நெல்லை ஏர்வாடி.

    Previous Next

    نموذج الاتصال