No results found

    நலம் விசாரிக்கலாம் வாங்க...


    முஸ்லிம் ஒருவர் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்யவேண்டிய ஆறு முக்கியமான கடமைகளில் 'நோயாளிகளை சந்திப்பது' என்பதும் ஒன்று. "நபிகள் நாயகம் கூறினார்கள்: நீங்கள் நோயாளிகளை சந்தித்தால் அவரது உயிர் விஷயத்தில் ஆறுதலான சொற்களை சொல்லுங்கள், அதனால் அவரது மனம் ஆறுதல் பெறும்". (நூல்: இப்னு மாஜா) "நீங்கள் நோயாளிகளை சந்திக்கச் சென்றால் அமர்வதை குறைத்துக்கொள்வதும், வீண் பேச்சை சுருக்கிக்கொள்வதும் நபிவழி ஆகும்" என இப்னு அப்பாஸ் ரலி கூறியுள்ளார்கள். "விரைவாக எழுவதுதான் உடல் நல விசாரிப்பில் சிறந்தது" என நபிகள் நாயகம் கூறினார்கள். (நூல்: பைஹகி)

    அதாவது நீண்ட நேரம் பேசாமல் விரைவாக எழுந்து வந்து விடவேண்டும் என்பதைத் தான் நபிகள் நாயகம் தனது நடைமுறையாக கடைபிடித்து வந்திருக்கிறார்கள் என்று இதன் மூலம் நாம் அறியமுடிகிறது. "நபிகள் நாயகம் கூறினார்கள்: நாளை மறுமையில் மக்கள் முன்னிலையில் அல்லாஹ் கேட்பானாம்... ஆதமின் மகனே, நான் உடல் நலமில்லாமல் இருந்தேனே... ஏன் நீ என்னை சந்திக்க வரவில்லை...?". "இறைவா... நீயே இந்த அகில உலகின் அதிபதியாக இருக்கிறாய்... உன்னை நான் எப்படி உடல் நலம் விசாரிக்க வர முடியும்?" என்று கேட்க, அப்போது அல்லாஹ் சொல்வானாம்: "இன்ன அடியான் உடல் நலமில்லாமல் இருந்தானே... அன்று அவனை நீ சந்தித்திருந்தால் அங்கு என்னை நீ சந்தித்திருப்பாய்..." என்று. (நூல்: முஸ்லிம்)

    ஏழையின் சிரிப்பில் மட்டுமல்ல ஒரு நோயாளியின் உடல்நல விசாரிப்பிலும் கூட இறைவனைக் காணமுடியும் என்று இந்த நபிமொழி மூலம் நாம் அறிய முடிகிறது. இப்படி இறைவனை நாம் காண்பதற்கு காரணமாக இருப்பதால் தான் 'காய்ச்சலை திட்டாதீர்கள்' என்று நபிகள் நாயகம் சொன்னார்களோ என்னவோ...?. ஏனெனில், காய்ச்சல் என்பது நமது உடலில் ஏதோ ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்பதை முதலில் முன்னறிவிப்பு செய்யும் செயல்களில் ஒன்று தான் அது. எனவே அதை திட்டுவது என்பது ஒரு அறிவாளியின் அழகிய செயலல்ல, என்பதைத் தான் நபிகள் நாயகம் நமக்கு நன்கு உணர்த்திக் காட்டுகிறார்கள். அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் தான் நோயாளி என்பதல்ல... சாதாரண கண் வலி ஏற்பட்டவரும் கூட நோயாளி தான்.

    "எனக்கு கண் வலி ஏற்பட்டிருந்தது, என்னை நலம் விசாரிப்பதற்காக நபிகள் நாயகம் வந்தார்கள்" என்று ஜய்து இப்னு அர்கம் என்ற நபித்தோழர் கூறியுள்ளார்கள். ஆக நோய் என்பதில் கூடுதல் குறைவு இருந்தாலும் அதற்கான விசாரிப்பில் நாம் வேறுபாடு காட்டக்கூடாது என்பதைத் தான் நபிகள் நாயகம் நமக்கு காட்டித் தருகிறார்கள். "சகோதரர் ஒருவர் மற்றொரு சகோதரரை நலம் விசாரிக்கச் சென்றால் அவர் திரும்பி வரும் வரை சுவனப்பூஞ்சோலையில் இருக்கிறார்" என்று நபிகள் நாயகம் கூறினார்கள் (நூல்: முஸ்லிம்) ஆனால் இன்றைக்கு நாம் நமது சுகநல விசாரிப்புகளை எப்படியெல்லாம் மாற்றி வைத்திருக்கிறோம் என்பது ஒருகணம் சிந்திக்கத்தக்கது. நமக்கு வேண்டியவர்கள், பணம் படைத்தவர்கள், தேவைப்படுபவர்கள், போகாவிட்டால் தவறாக எடுத்துக் கொள்பவர்கள் என நமக்குள் ஒரு பெரும்பட்டியலே போட்டு வைத்திருக்கிறோம்.

    ஆனால் நபிகள் நாயகம் எந்த ஒரு நோயாளியையும் பட்டியல் போட்டு பார்க்கவே இல்லை என்பது தான் உண்மை. தனக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த யூதச்சிறுவன் உடல் நலமற்றிருந்த போது நபிகள் நாயகம் அவனது வீட்டுக்குப் போய் நலம் விசாரித்தார்கள் என்பது மறக்க முடியாத வரலாறு. (நூல்: புகாரி) எனவே நோயாளிகளை உடல் நலம் விசாரிக்கும் முறையில் நாம் பாகுபாடு பார்க்கக்கூடாது. நபிகள் நாயகமும் தம்மைச் சுற்றியுள்ள சக மனிதர்களுடன் எவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பின்வரும் நிகழ்வுகளின் மூலம் அறியலாம். "அன்னை ஆயிஷா அறிவிக்கிறார்கள்: 'உடல் வலிக்கிறது' என்று சொல்லிக்கொண்டு யாராவது நபியிடம் வந்தால் அவரை தமது வலது கரத்தால் தடவிக்கொடுத்து இவ்வாறு பிரார்த்தனை செய்வார்கள்: "மக்களின் இறைவனே, இவரது சிரமத்தை நீக்கு. நீ தான் குணமளிப்பவன், இவருக்கு குணமளி. நீ அளிக்கும் குணம் தான் நோய் நொடியில்லாத சிறப்பான குணமாகும்". (நூல்: புகாரி, முஸ்லிம்) அவ்வாறே அந்த நோயாளிகள் அந்த கடினமான நேரத்தில் நமக்காகச் செய்யும் பிரார்த்தனையும் உடனடியாக ஏற்கத்தக்கதாகும். "நபிகள் நாயகம் கூறினார்கள்: நீ நோயாளியை சந்தித்தால் உனக்காக அவரிடம் துஆ செய்யச் சொல், ஏனெனில் அவரது பிரார்த்தனை வானவர்களின் பிரார்த்தனையைப் போன்றதாகும்". (நூல்: இப்னு மாஜா) ஆக, நோயாளிகளை நலம் விசாரிக்கச் செல்லும் போது அவர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்வதைப் போல் நாமும் அவர்களிடமிருந்து அவர்களின் துஆவை பெற்றுக் கொள்ளவும் வேண்டும். ஏனெனில், கடினமான காலங்களில் அவர்கள் அல்லாஹ்வுடன் மிக நெருக்கமாக இருக்கிறார்கள், இப்படிப்பட்ட இனிய தருணங்களில் இரு தரப்பினரின் பிரார்த்தனைகளும் மிக முக்கியத்துவம் பெறுகின்றன. மருந்துகளுக்குள்ள ஆற்றலை விட மந்திரச் சொற்களுக்குரிய ஆற்றல் அபாரமானவை; அதீத சக்தி கொண்டவை. வாருங்கள்... நோயாளிகளிடம் பாரபட்சம் இன்றி உடல் நலம் விசாரிப்போம்...! சமூகத்துக்கு பலம் சேர்ப்போம்...!! மவுலவி எஸ். என். ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.

    Previous Next

    نموذج الاتصال