`கெத்செமனே' தோட்டத்தில் ஏசு வியாகுலத்துடன் மும்முறை விழுந்து ஜெபித்தார். இந்த சம்பவங்களை நினைவு கூர்ந்து நேற்று கிறிஸ்தவ ஆலயங்களில் `பெரிய வியாழன்' அனுசரிக்கப்பட்டது. கத்தோலிக்க திருச்சபைகளில் பாதிரியார்கள் சபை மக்களின் கால்களை கழுவும் நிகழ்ச்சி நடந்தது. அதே போல சி.எஸ்.ஐ. உள்ளிட்ட பிற திருச்சபைகளிலும் பெரிய வியாழனையொட்டி சிறப்பு திருவிருந்து ஆராதனை நடந்தது. இந்த ஆராதனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். மேலும், ஏசுவை சிலுவையில் ஏற்றிய நிகழ்வை நினைவு கூரும் வகையில் இன்று (வெள்ளிக்கிழமை) `புனித வெள்ளி' சிறப்பு ஆராதனை நடக்கிறது.இதனால் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இன்று முழுவதும் உணவு உட்கொள்ளாமல் உபவாசம் இருந்து சிறப்பு ஆராதனையில் கலந்து கொள்வர்.
புனித வெள்ளியையொட்டி சி.எஸ்.ஐ. கிறிஸ்தவ ஆலயங்களில் மும்மணி தியான ஆராதனை நடைபெறும். ஏசு சிலுவையில் அறையப்பட்டபோது 7 வார்த்தைகளை சொல்வார். அந்த வார்த்தைகளை ஒவ்வொன்றாக தியானிக்கும் வகையில் இந்த ஆராதனை நடப்பது சிறப்பு வாய்ந்ததாகும். அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் புனித சவேரியார் ஆலயம், கூரைநாடு புனித அந்தோனியார் ஆலயம், சி.எஸ்.ஐ. தேவாலயம் தரங்கம்பாடியில் உள்ள தென்னிந்திய திருச்சபை, உரோமன் கத்தோலிக்க திருச்சபை, தமிழ் நற்செய்தி லுத்தரன் திருச்சபை உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்கள், திருச்சபை அமைப்புகளில் `புனித வெள்ளி' சிறப்பு ஆராதனை இன்று நடக்க இருக்கிறது.