No results found

    குரு சண்டாள யோகமும் உலகப் பொருளாதாரமும்


    பொருளாதாரத்தில் தன்னிறைவு பெரும் ஒரு நாடே உலக அரங்கில் வல்லரசாக திகழ முடியும். சமீப காலமாக உலக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவது. வருந்தக்கூடிய நிகழ்வாகும். அமெரிக்காவில் ஒரே வாரத்தில் 2 வங்கிகள் அடுத்தடுத்து திவாலாகி உள்ளன. இதனால், உலகையே உலுக்கிய 2008-ம் ஆண்டு நெருக்கடி மீண்டும் வரப்போகிறதா? என்ற அச்சம் எழுந்துள்ளது. அதன் தாக்கம் உலகளவில் எப்படி இருக்கும்? உலகமக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திப்பதற்கு காரணம் என்ன? மீள்வது எப்போது, எப்படி என்பது பற்றி இந்த கட்டுரையின் மூலம் காணலாம். ஒவ்வொரு வருடமும் தமிழ் புத்தாண்டாக இருந்தாலும் ஆங்கில புத்தாண்டாக இருந்தாலும் குரு, ராகு/கேது, சனிப்பெயர்ச்சி பலன்கள் உலக மனிதர்கள் வாழ்விலும் நாட்டின் பொருளாதாரத்திலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

    உலக பொருளாதாரத்தை நிர்ணயம் செய்பவர் ராஜகிரகமான குருபகவான். குரு என்றால் பணம். ஒவ்வொரு ஆண்டும் குருப் பெயர்ச்சியின் மூலம் மனிதர்களின் பொருளாதார வாழ்வில் ஏற்ற, இறக்கத்தை ஏற்படுத்தி உலக பொருளாதாரத்தை, முழு கட்டுப்பாட்டில் வைப்பவர் குரு பகவான். குருப் பெயர்ச்சியின் மூலம் 3 விதமான பலன்களை உலகிற்கு வழங்குகிறார். 1. சீரான சிறப்பான பொருளாதார வளர்ச்சி ஒரு ராசியில் ஒரு வருடம் வீதம் சஞ்சாரம் செய்யும் குருபகவான் நட்பு கிரகங்களின் சம்பந்தம் ஏற்படும் காலங்களில் நாடு மற்றும் நாட்டு மக்களின் பொருளாதார வளர்ச்சி அதிகமாகும்

    குரு நவகிரகங்களில் முதன்மை சுப கிரகமான குரு பகவானுக்கு மனித வாழ்வில் பல்வேறு உன்னதமான சுபபலன்களை உண்டாக்கக்கூடிய ஆற்றல் உண்டு. குருவின் பார்வைக்கு பல தோஷங்களை போக்கும் சக்தி உள்ளது. சுய ஜாதகத்தில் குரு பலமாய் அமைந்திருந்தால் மட்டுமே வாழ்க்கை சுபிட்சமாகவும் மகிழ்ச்சி கரமானதாகவும் இருக்கும். தனக்காரகனாகவும், புத்திரகாரகனாகவும் விளங்கும் குரு பகவான் இறை வழிபாட்டிற்கும் ஞானத்திற்கும் காரகனாகிறார். அது மட்டுமின்றி ஒழுக்கம், மற்றவர்களுக்கு உதவி செய்யும் மன நிலை, சுகவாழ்வு, புத்திரர்கள், பேரன்கள், பெருந்தன்மையான குணம், தூய்மை, புனிதமான நீர், இறை வழிபாடு, அறிவு, செல்வம், செல்வாக்கு, இறைவழிபாடு, மதகுருமார்கள், பெரியோர்கள் கல்வித்துறை, குதிரை, யானை, அழகிய வீடு, பிரம்மா, ஞானம், யோகப்பியாசம், ஆசிரியர் தொழில், அஷ்டமா சித்திகளை அடைதல், புரோகிதம், மதிநுட்பம், பெரியோர்களின் ஆசி, அரசாங்க அனுகூலங்கள், பாராட்டுகள், விருதுகள் கிடைத்தல், சாந்தமான சுபாவம், வாக்கு சுத்தம், ஆண்டியாதல், ரிஷி உபதேசம் பெற்றல் ஆகியவற்றுக் கொல்லாம் குரு காரகனாவார்.

    ராகு ஒரு பொருளை அல்லது ஒரு உயிரை அழிப்பது ராகுவின் குணமாகும். தான் சஞ்சாரம் செய்யும் ராசியின் தன்மைகளை அழிக்கும் சக்தி படைத்த கிரகம் ராகு. தான் நின்ற ராசியின் பலன்களை ஒருவரை அனுபவிக்க விடாமல் தடை செய்பவர். ராகுக்கு சொந்த வீடு கிடையாது என்பதால் தான் நின்ற வீட்டையே சொந்த வீடாக எடுத்துக்கொண்டு தன்னோடு சேர்ந்த கிரகங்களின் பலனைக் கொடுப்பார். ராகு ஒரு ஜாதகத்தில் வலுத்தால் ராகுவின் காரகத்துவங்களான நயவஞ்சகர்களுடன் பழகும் நிலை, மதம் மாறுவது, அந்நிய நாட்டிற்கு சென்று பிழைக்க வேண்டிய சூழ்நிலை, சிறை தண்டனை, விஷம் அருந்த செய்தல், கூட்டுமரணம், திடீர் விலை ஏற்றம், திடீர் சரிவு, விதவையுடன் தொடர்பு, மாந்திரீகம், பிறரை கெடுத்தல், அன்னிய மொழி பேசுதல், குஷ்டம், வழக்குகள், புத்திர தோஷம், பித்ரு தோஷம், விஷக்கடி போன்ற பிரச்சினைகளால் பாதிப்பு உண்டாகும். குரு சண்டாள யோகம் குருவும் ராகுவும் இணைந்து ஒரே ராசியில் இருந்தாலோ, ராகுவை குரு பார்த்தாலோ குரு சண்டாள யோகம் ஏற்படுகிறது. இதனால் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும் என்று பொதுவாக கூறப்படுகிறது. இந்த கிரக கூட்டணி சுபமாகவோ அல்லது பலமாகவோ அமைந்து விட்டால் அங்கு யோகம் தான் அதிகமாக வேலை செய்யும். மாறாக ஜனன ஜாதகத்தில் பலவீனமாகவோ அல்லது அசுபமாகவோ அமைந்து விட்டால் அங்கு தோஷமே அதிகமாக வேலை செய்யும் என்பது பொதுவான விதி. அதாவது தன்னுடன் தொடர்பு கொண்ட கிரகங்களை கிரகணப்படுத்தி அதன் வலிமையை தன்னுள் ஈர்த்துக் கொண்டு செயல்படுவது ராகுவின் குணம். இதை மேலும் விவரித்துக் கூறினால் பாம்புகள் புற்றில் வசித்தாலும் அந்த புற்றுகள் பாம்பினால் உருவாக்கப்படுவதில்லை. கறையான் புற்று மற்றும் பொந்துகளில் வசிக்கும். அதாவது அடுத்தவர் சொத்தை அபகரிப்பது மட்டுமல்லாமல் அவர்களை அழிப்பதுவே ராகுவின் வேலை. பொதுவாக ராகு தனக்கு சொந்த வீடு இல்லாத காரணத்தால் தான் நின்ற வீட்டின் பலனையும் தன்னுடன் இணைந்த கிரகத்தின் காரகத்துவத்தையும் கலந்து வெளிப்படுத்தும். அதாவது குருவுடன் இணைந்த ராகு தனக்கு சொந்த வீடு இல்லாத காரணத்தால் ராகு தசையில் குருவின் காரகத்துவங்களை தன்னுள் இழுத்துக் கொண்டு குருவாக செயல்பட்டு தாராள பொருள் வரவு, குழந்தை பேறு வீடு, வாகன யோகம் என அபரிமிதமான யோகங்களை வழங்குகிறது. ஒருவரின் ஜாதகத்தை பார்த்து எந்த முறையில் பலன் கூறினாலும் ஜாதகத்தில் உள்ள யோகங்களுக்கான பலனை சரியாக நிர்ணயிப்பது மிக முக்கியம். யோகம் என்றால் கிரகச் சேர்க்கை என்று பொருள். ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்து இருப்பதை ஜோதிடத்தில் யோகம் என்று கூறுகிறார்கள். பலவிதமான கிரகச் சேர்க்கைகள் இருந்தாலும் குரு+ராகு இணைவால் ஏற்படக் கூடிய யோகமான குரு சண்டாள யோகம் பற்றி பலவிதமான சந்தேகங்கள் நிலவிக் கொண்டே உள்ளது. சிலர் யோகம் என்று கூறும் கிரகச் சேர்க்கையை சிலர் அவயோகம் என்று கூறுகிறார்கள். இத்தகைய குரு ராகு சேர்க்கையை யோகம் என்ற அடிப்படையில் ஆய்வு செய்தால் ராகு தசையில் கோடி கோடியாக சம்பாதித்த பலர் ஏன் குரு தசையில் சிங்கிள் டீக்காக தெருக் கோடியில் நிற்க வேண்டும்? அவயோகம் என்று பலன் கூறினால் இந்த கிரகச் சேர்க்கை உள்ள பலர் ஒரு மஞ்சள் பையுடன் சொந்த ஊரை விட்டு கிளம்பி வந்தவர்கள். தங்கள் திறமைக்கும், தகுதிக்கும் பொருத்தமே இல்லாத தொழில் செய்து கோடிகளில் மிதக்கிறார்கள். குரு ராகுவோடு இணையும் போது குரு தன்னுடைய பார்வை பலத்தையும், காரக, ஆதிபத்ய பலனையும் இழந்து தன்னுடைய பார்வையால், பார்க்கும் இடத்தை புனிதப்படுத்தும் தகுதியை இழந்து விடுவார். அதனால் தான் ராகு தசையில் சம்பாதித்த அனைத்தும் குரு தசையில் இழக்க நேருகிறது. உலக பொருளாதாரம் ஜோதிடத்தில் குருவிற்கு ஜீவக்காரகன் என்று பெயர். ராகு அசுர கிரகமாகும். குரு ஒரு ஆன்மீக கிரகம், தெய்வத்தன்மையுடைய கிரகமாகும். குருவின் காரகத்து வங்களையும், ராகுவின் காரகத்து வங்களையும் ஒப்பிட்டு பார்த்தால் இரண்டும் நேர் எதிர்மாறான காரகத்தன்மைகளை கொண்டது. ஒன்றுக்கொன்று ஒவ்வாத தன்மைகளைக் கொண்ட இரு கிரகங்கள் சேர்க்கை பெற்றால் இவ்விரண்டு கிரகங்கள் குறிக்கும் காரகத்துவங்களும் பாதிக்கப்படும். ஏப்ரல் 22 முதல் அக்டோபர் 30 வரை சுமார் ஆறு மாத காலம் குருவும், ராகுவும் மேஷ ராசியில் சனி பார்வையில் சஞ்சரிக்கிறார்கள். குருச் சண்டாளயோகம் சனி பார்வையில் ஏற்படுவதால் பொருளாதாரத்தில் மிகப் பெரிய ஏற்றம் இறக்கம் ஏற்படும். உலக வர்த்தகத்தில், பொருளாதாரத்தில்.நிலையற்ற தன்மை நிலவும். உலகில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். அனைத்து பணப்பரிமாற்றமும் digital முறைக்கு மாற்ற உரிய நடவடிக்கைள், வழிமுறைகள், சட்ட திட்டங்கள் உருவாகலாம். வங்கிகள், நிதிநிறுவனங்கள், வட்டித் தொழில், சீட்டு நடத்துபவர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டிய காலம். பல வங்கிகள் பாதிக்கப்படும். தற்போது இரண்டு வங்கிகள் அமெரிக்காவில் திவாலானது இதற்கு உதாரணமாகும். மேலும் கடுமையான புத்திர தோஷம், புத்திர சோகம் ஏற்படலாம். பலர் செயற்கை கருத்தரிப்பு முறையை நாடுவார்கள். மேஷம் நெருப்பு ராசி. கும்பம் காற்று ராசி. காற்று ராசியில் உள்ள கும்ப சனிபகவான் நெருப்பு ராசியில் உள்ள குரு ராகுவை பார்ப்பதால் நெருப்பு, சம்பந்தம் பட்ட பாதிப்பு ஏற்படலாம். மத குருமார்கள் ஆன்மீக தலைவர்கள் சட்டசிக்கலை சந்திப்பார்கள்.மதக் கலவரம் அதிகமாகும். செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அதிகரிக்கும், தொழிலாளர்கள் போராட்டம் அதிகமாகும். கள்ள சந்தையில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கப்படும். விலைவாசி உயரும். பேராசையால் அதிக வட்டி அல்லது கவர்ச்சியான விளம்பரங்களை நம்பி மக்கள் பணத்தை இழப்பார்கள். சூதாட்டங்கள் புது வடிவம் பெறும். மக்கள் சட்டதிட்டங்களை மதிக்காத நிலை ஏற்படும். சட்டவிரோத பணபரிவர்த்தனை அதிகரிக்கும். பங்கு சந்தை வர்த்தகம் செய்பவர்கள் மிக கவனமாக இருக்கவேண்டும். முதியோர் இல்லங்கள் அதிகரிக்கும். சமூக விரோத சக்திகள் கை ஓங்கும். நாடுகளுக்கிடையே ஒற்றுமை குறையும். குழந்தைகளுக்கு அநீதி நடக்கும். கூட்டு மரணம் மிகுதியாக இருக்கும். 2021ல் கோட்சார குரு ராகுவின் சதயம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்த காலத்தில் கொரோனா இரண்டாவது, மூன்றாவது அலையால் உலகில் மற்றும் இந்தியாவில் பல மாநிலங்கள் முழு ஊரடங்கில் இருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. உக்ரைன்-ரஷ்யா போர் இந்த காலகட்டத்தில் தான் ஆரம்பமானது. குரு-ராகு சம்மந்தம் எந்த விதத்தில் இருந்தாலும் தனி மனித வாழ்க்கை மட்டுமல்ல, உலகத்திற்கும் கேடு தரும் சம்பவங்கள் நடக்கும். எனவே இந்த குரு சண்டாள யோகத்தால் நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்க மேஷத்தில் நிற்கும் குரு, ராகு நெருப்பு ராசி என்பதாலும் சனி காற்று ராசியான கும்பம் என்பதால் அவரவர் சக்திக்கு ஏற்ப அவரவர் பகுதியில் சண்டி ஹோமம் செய்து வந்தால் பாதிப்பு வெகுவாக குறையும்.

    Previous Next

    نموذج الاتصال