No results found

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை- அமித்ஷாவை இன்று சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி


    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க.வில் திடீரென ஏற்பட்ட உள்கட்சி குழப்பங்கள் முடிவுக்கு வர தொடங்கி உள்ளன. அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்ட பிறகு அவர் கட்சியை கைப்பற்ற மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவின. தனது பலத்தை காட்டுவதற்காக திருச்சியில் அவர் கூட்டிய ஆதரவாளர்கள் மாநாடும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வாகி இருக்கும் எடப்பாடி பழனிசாமி அடுத்தகட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளார். தேர்தல் ஆணையமும் அவரை அங்கீகரித்து இருப்பதால் தடைகள் நீங்கி உள்ள நிலையில் கட்சியை மீண்டும் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் திட்டங்களுடன் அவர் தயாராகி வருகிறார்.

    அதன் ஒரு பகுதியாக பாரதிய ஜனதாவுடன் உள்ள உறவை உறுதிப்படுத்த முடிவு செய்துள்ளார். அவருக்கு பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா உள்பட பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அனைவரும் ஆதரவு கரம் நீட்டி உள்ளனர். தமிழக அரசியலில் தி.மு.க.வுக்கு எதிராக பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப திட்டமிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி அதற்கு முன்னதாக டெல்லி சென்று பா.ஜ.க. தலைவர்களை சந்திக்க தீர்மானித்தார். அவரது கோரிக்கையை பா.ஜ.க. மூத்த தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி இன்று (புதன் கிழமை) டெல்லி செல்கிறார். அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோரும் டெல்லி செல்கிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமி இன்று பிற்பகல் 3.20 மணிக்கு கோவையில் இருந்து விமானத்தில் டெல்லி செல்கிறார். மற்றவர்கள் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்று உள்ளனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த 6 பேர் குழு இன்று இரவு 8 மணிக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்திக்க உள்ளது. அப்போது அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தப்பட உள்ளது. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் எப்படி செயல்படுவது என்பது பற்றி ஆய்வு செய்ய உள்ளனர். தற்போதைய அரசியல் சூழ்நிலை, தொகுதி பங்கீடு, பிரசார வியூகம் போன்றவையும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தமிழகத்தில் அ.தி.மு.க.வின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பாகவும் அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி சற்று விரிவாக பேசுவார் என்று கூறப்படுகிறது.

    தி.மு.க. மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் எடப்பாடி பழனிசாமி அவற்றை தொகுத்து கவர்னரிடம் கொடுக்க திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவரை முந்திக்கொண்டு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஒரு பட்டியலை தயாரித்து கவர்னரிடம் வழங்கினார். இதனால் அ.தி.மு.க. சார்பில் தயாரித்து வைக்கப்பட்டுள்ள தி.மு.க. ஆட்சி மீதான குற்றச்சாட்டு பட்டியலை இன்று இரவு அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி கொடுப்பார் என்று அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவித்தன. அந்த பட்டியலில் உள்ள தகவல்களின் பேரில் நடவடிக்கை எடுக்கவும் அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துவார் என்று தெரிய வந்துள்ளது. அமித்ஷாவை சந்தித்த பிறகு எடப்பாடி பழனிசாமியும் அ.தி.மு.க. தலைவர்களும் இன்று இரவு டெல்லியில் தங்க உள்ளனர். நாளை (வியாழக்கிழமை) அவர்கள் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சிலரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா டெல்லியில் இருக்கும்பட்சத்தில் அவரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. நட்டாவை சந்தித்தால் தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஒரே ஒரு தொகுதியில் போட்டியிட வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கேட்டு கொண்டதன் பேரில் அ.தி.மு.க. வேட்பாளரை எடப்பாடி பழனிசாமி வாபஸ் பெற வைத்தார். இதன் மூலம் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தொடர்வதை எடப்பாடி பழனிசாமி உறுதிப்படுத்தி உள்ளார். அதே சமயத்தில் தமிழகத்தில் இந்த கூட்டணியின் நிலைப்பாடு தொடர்பாக பா.ஜ.க. மேலிட தலைவர்களிடம் பேசி உறுதிப்படுத்துவதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Previous Next

    نموذج الاتصال