இந்த அரசு கர்னல் ஜான் பென்னி குயிக்குக்கு லண்டன் மாநகரில் மார்பளவு சிலை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து அமைச்சர்கள், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் திறந்து வைத்தார்கள். தற்போது கர்னல் ஜான் பென்னி குயிக் சிலை கருப்புத் துணியால் மூடப்பட்டிருப்பதாகவும், சிலை சேதமடைந்திருப்பதாகவும் தென் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்த கர்னல் ஜான் பென்னி குயிக்கின் சிலை அவமானப்படுத்தப்பட்டிருப்பதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வெளி வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சிலை அமைப்பதற்கான ஒருங்கிணைப்பாளர் பீர்ஒளி என்பவர் தனது பேட்டியில் தமிழ்நாடு அரசாங்கம் எங்களையும், கர்னல் ஜான் பென்னி குயிக்கின் குடும்பத்தாரையும் தொடர்பு கொண்டு லண்டன் மாநகரில் உள்ள கேம்பர்லி பார்க்கில் மார்பளவு சிலை வைக்க வேண்டும் என்றும், ஒரு சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யவும் கேட்டுக் கொண்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக அட்லாண்ட்ஸ் என்ற நிறுவனத்திடம் தமிழக அரசு தொடர்பு கொண்டு ரூ.26 லட்சம் பணத்தை வழங்கியதாகவும், ரூ.92 லட்சம் மொத்தம் செலவானதாகவும், ரூ.20 லட்சம் கர்னல் ஜான் பென்னி குயிக்கின் குடும்பத்தினர் வழங்கியதாகவும், மீதமுள்ள ரூ46 லட்சம் தொகையினை அட்லாண்ட்ஸ் நிறுவனத்திற்கு கொடுக்காத காரணத்தினால் அந்நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில் லண்டன் மாநகர கவுன்சில் சிலை அகற்றப்படும் என்றும், தற்போது கருப்புத் துணியால் மூடி சீல் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். உண்மை நிலை என்ன என்றும், மூடிய சிலையினை உடனடியாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சிலை சேதமடைந்திருந்தால், அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டுமென்றும், தொடர்ந்து சிலை பராமரிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளிக்கையில், "எதிர்க்கட்சித் தலைவர் இதே பிரச்சினையை திடீரென கொண்டு வந்துள்ளார். அரசு இதன் விவரங்களை அறிந்து தேவையான நடவடிக்கை எடுக்கும். இது குறித்து முழுமையாக விசாரித்து சபைக்கு அறிவிப்போம்" என்றார்.