பிறப்பின் அடிப்படையில் தலைமையை தீர்மானிக்காமல், ஜனநாயக அடிப்படையில் தலைமையை தேர்ந்தெடுத்து, ஜனநாயக மாண்புகளைக் காத்து நிற்கும் கழகத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றிருப்பதை எண்ணி பெருமிதம் அடைகிறேன். பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள எனக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் மற்றும் கூட்டணிக் கட்சிகள், தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், பல்வேறு சமூக இயக்கங்களின் தலைவர்களுக்கும், கலைத்துறையைச் சேர்ந்த அன்பர்களுக்கும், எனது இதயப்பூர்வமான நன்றிகளை உரித்தாக்குகிறேன். "எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்'' என்று சூளுரைத்த, நம் புரட்சித் தலைவி அம்மாவின் சபதத்தை நிறைவேற்ற வேண்டிய மாபெரும் பொறுப்பு நமக்கு உள்ளது.
கழக நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் நல்லாசியோடும், கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளின் ஒத்துழைப்போடும், சிறந்த முறையில் கழகத்தை வழிநடத்தி, மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மலர்வதற்கு இரவு, பகல் பாராமல் அயராது பணியாற்றுவேன் என்ற உறுதியை மனதார அளிக்கிறேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிப் பயணம் தொடர, தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்ற தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.