அதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி விரைவில் டெல்லி சென்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை சந்தித்து வாழ்த்து பெற திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது, தமிழகத்தில் உள்ள இதர கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பது உள்ளிட்ட தேர்தல் வியூகங்கள் குறித்தும் விவாதிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைக்கப்பட்டால் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டதாக தெரியவந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமியை போனில் தொடர்பு கொண்டு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்தபோது அவர்கள் இருவரும் மனம் விட்டு பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்தபிறகு அண்ணாமலை நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தமிழகத்தைச் சேர்ந்த மத்திய மந்திரி எல்.முருகனும் நேற்று பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து பேசினார். அவர்கள் தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதித்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டெல்லி செல்ல திட்டமிட்டு இருக்கும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அடுத்த கட்ட புதிய நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவார் என்று தெரியவந்துள்ளது. இதன் மூலம் அ.தி.மு.க.வில் வரும் நாட்களில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.