பின்னர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- அ.தி.மு.க.வை பொறுத்தவரையில் எந்த நிர்வாகியும், தொண்டரும் பாதிக்கப்பட்டால் அவர்களது குடும்பத்துக்கு என்றைக்கும் பக்கபலமாக இருப்போம். தமிழ்நாட்டில் போதை பொருட்கள் அதிகமாக விற்பனை செய்யப்படுகிற காரணத்தால் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி இப்படிப்பட்ட கொடூரமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை தடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரின் கவனத்துக்கு நான் தொடர்ந்து கொண்டு சென்று வருகிறேன். ஆனால் இந்த அரசு இதற்கு செவி சாய்த்து சட்டரீதியான நடவடிக்கை எடுப்பது இல்லை. அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு பேணி காக்கப்பட்டது.
மதுரையில் அ.தி.மு.க. மாநில மாநாடு வருகிற 20.8.2023 அன்று பிரமாண்ட முறையில் நடைபெறும். இந்தியாவில் இருக்கின்ற தலைவர்கள் எல்லாம் மதுரையை நோக்கி பார்க்க கூடிய வகையில் இந்த மாநாடு இருக்கும். அ.தி.மு.க.வுக்கு திருப்புமுனையாக அமையும். பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் நிச்சயம் நல்ல கூட்டணி அமையும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தில் நிலுவையில் இருக்கிறது. இதுதொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் குறிப்பிட்ட கால அளவு நிர்ணயித்து இருக்கிறார்கள். அதற்குள் எங்களுக்கு சின்னம் கிடைக்கப்பெற்றால் தலைமை கழக நிர்வாகிகளுடன் தேர்தல் சுற்றுப்பயணம் குறித்து ஆலோசிக்கப்படும்.
அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர் சேர்க்கை, உறுப்பினர்கள் அட்டை புதுப்பிப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 3 மாதங்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படும். நான் சட்டசபையில், லண்டனில் உள்ள பென்னிகுயிக் சிலைக்கு அவமதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டினேன். நான் பேசுவதற்கு முந்தைய செய்தியை நேரடியாக ஒளிபரப்பு செய்கிறார்கள். அதற்கு பின்னால் நடைபெற்ற கவன ஈர்ப்பையும் ஒளிபரப்பு செய்தார்கள். நான் எதிர்க்கட்சி தலைவர் என்கிற முறையில் நாட்டு மக்களின் பிரச்சினைகளை சட்டசபையில் எடுத்து வைக்கிற போது அதனை அப்படியே இருட்டடிப்பு செய்துவிடுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.