விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தோம். தற்போது ஏகமனதாக என்னை பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி. அ.தி.மு.க.வில் தான் சாதாரண தொண்டன் கூட உச்சபட்ச பதவியான பொதுச் செயலாளர் பதவியை அடைய முடியும். வேறு எந்த கட்சியிலும் இது நடக்காது. தி.மு.க. என்றால் கருணாநிதியின் குடும்பம் தான் ஆட்சி புரியும். கட்சி பதவிக்கும் வர முடியும். ஆனால் ஜனநாயக அமைப்புள்ள கட்சி அ.தி.மு.க. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கூட எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஆக முடியும். முதலமைச்சராக கூட ஆக முடியும்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகப் போகிறது. இந்த 2 ஆண்டுகளில் மக்கள் விரோத ஆட்சி நடந்து வருகிறது. எப்போது இந்த ஆட்சி அகலும் என்று மக்களின் குரல் தமிழகம் முழுவதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இரண்டே ஆண்டுகளில் மக்களின் எதிர்ப்பை சந்தித்துள்ள ஒரே அரசு தி.மு.க. அரசு. ஊழலுக்காக இந்தியாவில் கலைக்கப்பட்ட ஒரே அரசு தி.மு.க. அரசு தான். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க. தான். அவர்கள் அ.தி.மு.க.வினரை பார்த்து ஊழல் செய்துள்ளனர் என்கின்றனர். அ.தி.மு.க. இனி எந்த தேர்தல் வந்தாலும் வெற்றி பெறும். திறமையற்ற, பொம்மை முதலமைச்சர் தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறார். அவர் செய்யும் ஒரே வேலை அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மீது வழக்குப்போடுவது, மக்களுக்கு எந்த சேவையும் செய்யவில்லை.
அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் விடுபட்ட கோவை பகுதிகளை இணைக்கும் திட்டத்துக்கு கடந்த ஆட்சியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. அந்த திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர். கோவை நகரின் பல பகுதிகள் தோண்டப்பட்டு அப்படியே கிடக்கிறது. மக்கள் சாலைகளில் செல்ல முடியவில்லை. மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு கடந்த ஆட்சியில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆட்சியில் அந்த திட்டம் அறிவிக்கப்பட்டது போல் பொய்யான தோற்றத்தை உருவாக்கி உள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் கட்டணம், மின் கட்டணம், குப்பை வரி உயர்வு என மக்கள் தலையில் சுமையை சுமத்தி உள்ளனர். இதுதான் தி.மு.க.வின் சாதனை.
ஒரு புதிய திட்டத்தையாவது கோவைக்கு அறிவித்துள்ளார்களா, மக்களை ஏமாற்றும் கவர்ச்சிகர அரசியல் செய்து வருகின்றனர். பல கட்சிக்கு சென்று வந்த எந்த கட்சிக்கும் விசுவாசமில்லாத அமைச்சர் ஒருவர் கோவை மக்களை ஏமாற்றி வருகிறார். வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். கோவை மாவட்டம் அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை. தேர்தல் பணிகளை இப்போது இருந்தே நிர்வாகிகள், தொண்டர்கள் தொடங்க வேண்டும். புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.