No results found

    எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக குரல் கொடுக்க வேண்டும்- சமூக நீதி மாநாட்டில் வலியுறுத்திய முதல்வர் ஸ்டாலின்


    சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பின் முதல் தேசிய மாநாடு, டெல்லியில் இன்று தொடங்கியது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் நடைபெற்று வரும் இம்மாநாட்டில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- ஒட்டுமொத்த இந்தியாவையும் இணையத்தால் இணைத்துள்ளோம். சமூக நீதி நம்மை இணைத்துள்ளது. சமூக நீதியை நிலைநாட்டுவதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம். சமூகநீதி எனப்படும் இடஒதுக்கீடு என்பதே சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்களுக்கு தரப்பட வேண்டும் என்பதே இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வரையறை.

    உயர்சாதி ஏழைகள் என்று கூறி இடஒதுக்கீடு தருகிறது பாஜக அரசு. இது சமூக நீதி அல்ல. ஏழைகளுக்கு எந்த பொருளாதார உதவி செய்வதை நாங்கள் தடுக்கவில்லை. அது பொருளாதார நீதியே ஆகுமே தவிர சமூகநீதி ஆகாது. ஏழைகள் என்றால் அனைத்து ஏழைகள் தானே இருக்க முடியும். அதில் என்ன உயர்சாதி ஏழைகள்? ஒடுக்கப்பட்ட சாதி ஏழைகளை புறக்கணிப்பதே சமூக அநீதி அல்லவா? அதனால் தான் பொருளாதார அளவுகோலை இடஒதுக்கீட்டில் நாங்கள் எதிர்க்கிறோம். உயர்சாதியில் இருக்கும் ஏழைகளுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவது ஒன்றிய பாஜக அரசின் திட்டம். இடஒதுக்கீடு வழங்குவதால் தகுதி, திறமை போய்விட்டது என்று கூறி வந்த சிலர் இந்த இடஒதுக்கீட்டை மட்டும் ஆதரிக்கிறார்கள். பட்டியலின மக்கள், சிறுபான்மையினர் உள்ளிட்டோருக்கான இடஒதுக்கீடு முறையாக வழங்கப்படவேண்டும். நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு சமூக நீதிக்கான புரிதலை ஏற்படுத்த வேண்டும். இடஒதுக்கீட்டை தேசிய, மாநில அளவில் கண்காணிக்க வேண்டும். சமூகநீதியை காக்கும் கடமை நமக்குத்தான் உள்ளது. அதனால்தான் இணைந்துள்ளோம்; புறக்கணிக்கப்பட்டோரை கைத்தூக்கி விடுவதுதான் சமூகநீதி. கூட்டாட்சி, மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை, சமத்துவம், சகோதரத்துவம், சோசலிசம் மற்றும் சமூக நீதி ஆகிய கொள்கைகளை இந்தியா முழுவதும் நிலைநாட்ட நாம் குரல் கொடுக்க வேண்டும். அது தனித்தனி குரலாக இருக்கக் கூடாது. அது ஒற்றுமையின் குரலாக, கூட்டணிக் குரலாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    Previous Next

    نموذج الاتصال