No results found

    நிகழ்கால ராஜராஜசோழனாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்- அமைச்சர் சேகர்பாபு பேச்சு


    சட்டசபையில் கேள்வி நேரத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் ஆர்.காமராஜ் (நன்னிலம்), நன்னிலம் வாஞ்சியம் வாஞ்சிநாதசாமி கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படுமா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் சேகர்பாபு, "வாஞ்சிநாதசாமி கோவிலுக்கு ரூ.61 லட்சம் மதிப்பீட்டில் 23 பணிகள் உபயதாரர் நிதியில் நடைபெற்று வருகின்றன. மேலும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு, சூரிய ஒளியின் வாயிலாக மின்சாரத்தை பெறுகின்ற அமைப்பு, பசுமடம் போன்ற 5 பணிகள் ரூ.1.40 கோடி செலவில் அறம் சார்ந்த நிதியில் இருந்து வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்த கோவிலுக்கு பாலா லயம் நடத்தப்பட்டுள்ளது. வெகு விரைவில் பணிகளை நிறைவேற்றித் தந்து கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்றார். அப்போது உறுப்பினர் காமராஜ், "சோழவள நாட்டில் பஞ்ச ஆரண்யங்கள் என்று 5 தலங்கள் இருக்கிறது. ஒரே நாளில் 5 தலங்களையும் தரிசனம் செய்யக்கூடிய வகையில் அதிகாலையில் இருந்து இரவு முதல் தரிசிக்க கூடிய ஒரே நேர் கோட்டில் 5 சிவ தலங்கள் அமைந்திருக்கிறது. அதில் 2-வது தலமான அவளிவநல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்வதற்கு பணிகள் தொடங்கப்பட உள்ள சூழ்நிலை இருக்கிறது. ஆனால் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. ஆலங்குடி அபய வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு மொட்டை கோபுரம்தான் இருக்கின்றது. அதற்கு ராஜகோபுரம் அமைத்து தர வேண்டும்" என்றார்.

    இதற்கு அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்து கூறியதாவது:- சாட்டநாதர் கோவில் என்பது பஞ்ச ஆரண்ய தலங்களில் வனம் சார்ந்த 2-வது கோவில். அவர் கோரிய கும்பாபிஷேக பணிகள் வருகிற 16-ந்தேதி அன்று பாலாலயம் செய்யப்பட இருக்கிறது. சுமார் ரூ.34.30 லட்சம் மதிப்பீட்டில் 5 பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. வரதராஜ பெருமாள் கோவிலில் மொட்டை கோபுரம் இருப்பதாக தெரிவித்தார். 300 ஆண்டுகள் பழமையான கோவில் என்பதால் தொல்லியல் வல்லுனர் குழுவினரோடு ஆய்வு செய்து அந்த மொட்டை கோபுரத்தின் ஸ்திரத்தன்மையை ஆய்வு செய்து சாத்தியக் கூறுகள் இருப்பின் 3 நிலை ராஜகோபுரமாக கட்டித் தருவதற்கு இந்துசமய அறநிலையத்துறை முயற்சிக்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்பட 7 நிலை ராஜ கோபுரங்கள் இரண்டும், 5 நிலை ராஜ கோபுரங்கள் இரண்டும், 3 நிலை ராஜ கோபுரங்கள் இரண்டும் என்று 6 கோவில்களின் ராஜகோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று இருக்கிறது. ராஜ ராஜசோழன் காலத்தில் நடைபெற்ற கோவில் பணிகளுக்கு இணையாக நம்முடைய நிகழ்கால ராஜராஜ சோழனாக திகழும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியிலே நடைபெற்று வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    Previous Next

    نموذج الاتصال