இதுதொடர்பாக சீனாவின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஏப்ரல் 27ம் தேதி முதல் 28ம் தேதி வரை இந்தியாவின் புதுடெல்லியில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பு நாடுகளின் ராணுவ மந்திரிகள் கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இதற்கான அழைப்பின்பேரில், சீன ராணுவ மந்திரி ஜெனரல் லி ஷாங்ஃபு கலந்து கொள்கிறார். இந்த கூட்டத்தின்போது, ஜெனரல் லி, மாநாட்டில் உரையாற்ற உள்ளார். மேலும், உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்திக்க உள்ளார். சர்வதேச மற்றும் பிராந்திய நிலவரம், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு போன்ற பிரச்சினைகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்ள உள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெனரல் லீயின் வருகைக்கு முன்னதாக, கடந்த 23ம் தேதி சீன பகுதியில் உள்ள சுஷுல்-மோல்டோ எல்லையில் சீன-இந்திய படைப்பிரிவு கமாண்டர் அளவிலான 18வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை குறித்து சீன பாதுகாப்பு அமைச்சகம் சாதகமாக கருத்து தெரிவித்தது. எல்லைப் பகுதிகளில் அமைதியை பாதுகாப்பது மட்டுமின்றி, கிழக்கு லடாக் பகுதியில் மீதமுள்ள இடங்களில் குவிக்கப்பட்டுள்ள படைகளை திரும்ப பெறும் பணிகளை விரைவுபடுத்த இரு தரப்பும் ஒப்புக்கொண்டன என்றும் சீன பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.