சட்டம் அறிந்தவர் போல் கருத்துக்களைத் தெரிவித்து வரும் ஆளுநருக்கு, அரசியலமைப்புச் சட்டத்தின்படி, பண மசோதாவைத் திரும்ப அனுப்பிட அதிகாரம் கிடையாது. ஆனால் 17-01-2022 அன்று ஆளுநர் அவர்களாலேயே பரிந்துரைக்கப்பட்டு சட்டமன்றத்தால் ஏற்பளிக்கப்பட்டு, பேரவைத் தலைவர் அவர்களால் பண மசோதா என்று 20-10-2022 அன்று சான்றளிக்கப்பட்ட ஆன்லைன் ரம்மி மசோதாவை அவர் 6-3-2023 அன்று திரும்ப அனுப்பியது அரசியலமைப்புச் சட்டத்தை மீறியது என்பதை அவர் தெரிந்தும் செய்துள்ளாரா என்பதை பொது மக்களின் கருத்துக்கே விட்டு விடுகிறேன். இந்த நிலையில், இன்றைய தினம் ஆளுநர் அவர்கள் தெரிவித்துள்ள கருத்து, அவர் வகிக்கும் பதிவிக்கு அழகும் அல்ல. அவர் அப்படிப் பேசிய இடம் முறையான இடமும் அல்ல. கிடப்பில் இருந்தாலே நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். நீண்ட நாட்களாக கிடப்பில் வைக்கப்பட்டுள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். வார்த்தை அலங்காரத்திற்காக அதனை நிறுத்தி வைப்பு என்கிறோம் என்று பேசி இருக்கிறார் ஆளுநர். மாணவர்களைக் கூட்டி வைத்துக் கொண்டு அவர்கள் மத்தியில் இப்படி பேசி இருக்கிறார்.
ரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்துள்ள ஒருவர், நிர்வாக ரீதியான தான் எடுக்கும் நிலைப்பாடு குறித்து பொதுவௌியில் இப்படி அலட்சியமாகக் கருத்துகளை வெளிப்படுத்துவது அரசியல் சட்ட வரையறைகளை மீறிய செயல் ஆகும். மாநில அரசின் சுருக்கெழுத்து தான் ஆளுநர் என்று உச்ச நீதிமன்றம் அளித்த ஒரு வழக்கின் தீர்ப்பிள் சொன்னார்கள். அதனை மறந்துவிட்டு தி கிரேட் டிக்டே்டராக தன்னை ஆளுநர் நினைத்துக் கொள்ள வேண்டாம். எதையும் துணிச்சலாக ஏற்கவோ, எதிர்க்கவோ செய்யாமல் கிடப்பில் போடுவது என்பது அரசியல் சட்டம் அங்கீகரித்த பதவியில் இருப்பவருக்கு அழகல்ல. அதையும் தாண்டி, அதனை சட்டபூர்வமற்ற பொது வெளியில் பகிர்ந்து கொள்வதோடு, நியாயப்படுத்திட முயல்வது என்பது மிகமிக மோசமான முன்னுதாரணம் ஆகும். தான் சொன்ன கருத்தைத் திரும்பப் பெறுவதே ஆளுநர் அவர்கள் எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணத்துக்கு உண்மையாக நடந்து கொள்வது ஆகும். ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களின் குரலைப் பிரதிபலிக்கும் தமிழ்நாடு சட்டசபையின் மாண்பினைக் குறைக்கும் வகையில் ஆளுநர் அவர்கள் பேசி வருவது அவருக்கும் அழகல்ல. அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல. இதனை உணர்ந்து அவர் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவும், அரசியலமைப்புச் சட்டத்தில் ஆளுநர் பதவிக்கு அளிக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாக நிறைவேற்றிடும் வகையில் அவர் செயல்படுவார் என நான் நம்புகிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.