No results found

    2024 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறுவதே இலக்கு- எல்.முருகன் பேச்சு


    நாமக்கல் மாவட்டத்தில், மத்திய தகவல்-ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி டாக்டர் எல். முருகன் இன்று நாமக்கல் மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில், பா.ஜ.க கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:- பா.ஜ.க இன்று மிகப்பெரிய அளவில் எழுச்சி பெற்று வீறு நடை போட்டுக் கொண்டுள்ளது. தமிழகத்தில் முக்கியமான கட்சியாக வளர்ந்துள்ளோம். பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு பல திட்டங்களை வழங்கியுள்ளார். அனைத்து கிராமங்களிலும் பிரதமரின் திட்டங்களால் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு திட்டம் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதில் ஏராளமான மக்கள் பயன் அடைந்துள்ளனர்.

    விவசாயிகளுக்கு நேரடியாக ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் விவசாயிகள் சம்மான் நிதி, அனைத்து வீடுகளுக்கும் கழிப்பிட வசதி, உள்ளிட்ட பல திட்டங்களை பிரதமர் கொண்டு வந்தார். இந்தியாவிலேயே முத்ரா திட்டத்தில் பெண்கள் அதிகம் பயன்பெற்ற மாநிலம் தமிழ்நாடு என்ற இலக்கை நாம் அடைந்துள்ளோம். தேசிய அளவில் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளோம். பிரதம மந்திரியின் தெருவோர வியாபாரிகளுக்கான நிதி திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்று பயனடைந்து வருகின்றனர். பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு திட்டம் இளைஞர்களுக்கு பெரும் பயனாக அமைந்துள்ளது. உலக அளவில் இறால் ஏற்றுமதியில் இந்தியாவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. பிரதம மந்திரியின் சுயசார்பு இந்திய திட்டத்தின்கீழ் ஆந்திரா, சென்னை, மகாபலிபுரம், மரக்காணம் பகுதியில் இருந்து அதிக அளவில் இறால் ஏற்றுமதி நடைபெற்று வருகிறது. கடல் பொருட்கள் ஏற்றுமதி நடைபெற்று வருகிறது. இதில் நாம் முதன்மை இடத்தில் உள்ளோம்.

    ஜி-20 மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது உலக அளவில் இன்று வரவேற்பு பெற்றுள்ளது. இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளிவிட்டு 5-வது பொருளாதார நாடாக உலக அளவில் முன்னேறி உள்ளது. ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்குவதில் பிரதமர் நரேந்திர மோடி முனைப்போடு உள்ளார். கொரோனா காலத்தில் கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டத்தில் கூடுதலாக 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, அனைத்து ரேஷன் அட்டைக்காரர்களுக்கும் வருகிற டிசம்பர் 2023 முடிய நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏழை மக்களின் நலன் நாட்டின் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, பிரதமர் செயலாற்றி வருகிறார்.

    அமிர்த் திட்டத்தின் கீழ் 100-வது சுதந்திர தினத்தை நோக்கி நாம் அடி எடுத்து வைத்துள்ளோம். அடுத்த 25 ஆண்டுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு முன்னோட்டமாக பட்ஜெட் போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு ரூ.6 ஆயிரம் கோடி ரெயில்வே துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 9 புதிய ரெயில் தடங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாமக்கல் ரெயில் நிலையத்தை மேம்படுத்த 10 கோடி ரூபாய் ஏற்கனவே அமிர்த திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதை மேலும் மேம்படுத்த தரம் உயர்த்தி 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செலவில் நாமக்கல் ரெயில் நிலையம் புதிய பேருந்து நிலையம் அருகே வர உள்ளது. அதற்காக ரெயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் சேலம் ஒன்றிணைந்த ஆவின் ஒன்றியமாக இருந்தது. இதற்கு நாமக்கல்லுக்கு என பிரத்தியேகமாக தனி பால் பண்ணை ஒன்றியம் அமைக்க தேசிய பால் பண்ணை வாரியத்தின் மூலம் 7 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி பிரதமர் வழங்கி உள்ளார். மக்களின் தேவை அறிந்து கோரிக்கைகளை நிறைவேற்றி தரும் அரசாக நரேந்திர மோடியின் அரசு உள்ளது. பா.ஜ.க. நிர்வாகிகள் பயனாளிகளை நேரடியாக தொடர்பு கொண்டு, அவர்களோடு நட்பு பாராட்டி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்க வேண்டும். பிரதமர் தமிழ் புத்தாண்டை நம்மோடு இணைந்து கொண்டாடியது நமக்கெல்லாம் பெருமை சேர்ப்பதாகும். தமிழ் பண்பாடு, கலாச்சாரத்திற்காக பிரதமர் மேம்படுத்தி வருகிறார். வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் அதிக அளவிலான தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற வேண்டும். அதுவே நம் இலக்கு. அதற்கு நாம் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் இவ்வாறு மத்திய மந்திரி டாக்டர் எல். முருகன் பேசினார்.

    Previous Next

    نموذج الاتصال