No results found

    சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு விமான கட்டணம் 3 மடங்கு அதிகரிப்பு


    இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை நாளை (சனிக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதேபோல் கோடை விடுமுறை மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை உள்ளது. ஏற்கனவே சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ், ரெயில்களில் முன்பதிவு முழுவதும் முடிந்துவிட்டன. கடைசி நேரத்தில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் விமான பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள். இதனால் தற்போது வழக்கத்தை விட சென்னை விமான நிலையத்திற்கு வரும் உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை விமானங்களில் கட்டணங்கள் 3 மடங்கு அதிகரித்து உள்ளன. இதைப்போல் டெல்லி, கொல்கத்தா போன்ற வட மாநிலங்களுக்கு செல்லும் விமானங்களிலும் கட்டணங்கள் அதிகரித்து இருக்கிறது.

    சொந்த ஊர்களில் பண்டிகையை மற்றும் கோடை விடுமுறை நாட்களை குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில், கட்டண உயர்வை பொருட்படுத்தாமல் அதிக கட்டணங்கள் கொடுத்து விமானங்களில் பயணிகள் பயணம் செய்து வருகிறார்கள். இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானங்களில், வழக்கமான கட்டணம் ரூ. 3,675 ஆகும். ஆனால் இன்று ரூ. 11 ஆயிரம் முதல் ரூ. 14 ஆயிரம் வரை டிக்கெட் கட்டணம் உள்ளது. சென்னை-மதுரை வழக்கமான விமான கட்டணம் ரூ. 3,419. ஆனால் இன்றைய தினம் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ.13 ஆயிரம் கட்டணம் பெறப்பட்டது. சென்னை-திருச்சி இடையே வழக்கமான கட்டணம் ரூ. 2,769. ஆனால் ரூ. 9 ஆயிரத்தில் இருந்து ரூ.13 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. கோவைக்கு வழக்கமான கட்டணம் 3,313. இன்று ரூ. 5,500-ரூ. 11 ஆயிரம் கட்டணம் இருந்தது. சென்னையில் இருந்து டெல்லிக்கு ரூ.8500 முதல் ரூ.10 ஆயிரம் வரையும், கொல்கத்தாவுக்கு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையும் விமான கட்டணம் இருந்தது.

    Previous Next

    نموذج الاتصال