சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அருகில் உள்ள அ.தி.மு.க. துணைத்தலைவர் இருக்கையில் ஆர்.பி. உதயகுமாரை அமர வைக்க வேண்டும் என்றும், ஓ.பன்னீர்செல்வத்துக்கு வேறு பகுதியில் இடத்தை ஒதுக்கி கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் சபாநாயகர் அப்பாவு இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. சட்டமன்ற விதிகளின்படி எதிர்க்கட்சி துணைத்தலைவர் பதவி என்பது இல்லை. அதேநேரத்தில் யார்-யாரை எங்கு அமர வைக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட அதிகாரத்துக்குட்பட்டது என்று அவர் விளக்கம் அளித்தார். ஆனால் எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஓ.பி.எஸ்.சின் இருக்கையை எப்படியாவது மாற்றிவிட வேண்டும் என்று அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவுவிடம் நேரில் பலமுறை முறையிட்டுள்ளனர். இதற்காக வெளிநடப்பும் செய்துள்ளனர். இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் நேற்று அங்கீகரித்துள்ளது. இதையடுத்து அ.தி.மு.க. கொறடா எஸ்.பி.வேலுமணி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இன்று சபை கூடும் முன்னர் சபாநாயகர் அப்பாவுவை அவரது அறைக்கு சென்று நேரில் சந்தித்து மனு அளித்தனர். அப்போது தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை சுட்டிக் காட்டி கருத்துக்களை தெரிவித்தனர். ஓ.பி.எஸ்.சின் இருக்கையை மாற்றக்கோரி பலமுறை மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அ.தி.மு.க. சார்பில் இன்று மனு அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமியின் அருகில் உள்ள ஓ.பி.எஸ்.சின் இருக்கை மாற்றப்பட்டு அவருக்கு வேறு இடம் ஒதுக்கப்படுமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவேளை அப்படி ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை மாற்றப்பட்டால் எடப்பாடி பழனிசாமியின் இருக்கை அருகே எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஆர்.பி.உதயகுமார் அமர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.