அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி மிகவும் வலுவாக இருக்கிறது என்று மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார். எங்களுடைய மாநில தலைவரும் சொல்லி இருக்கிறார். நானும் பலமுறை சொல்லி இருக்கிறேன். அ.தி.மு.க. தலைவர்களும் இதையே கூறி உள்ளனர். எனவே எங்கள் கூட்டணி மிக வலிமையான கூட்டணியாக இருக்கிறது. இந்த கூட்டணி தொடர்ந்து நீடிக்கும். தி.மு.க. கூட்டணியில்தான் சலசலப்பு இருக்கிறது. தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, நிர்வாகிகள் கூட்டத்தில் பா.ஜனதா வளர்ந்து கொண்டிருப்பது தொடர்பாக தனது கருத்துக்களை தெரிவித்ததில் சர்ச்சை இல்லை என்று நான் கருதுகிறேன். அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம் என்பதை அவர் தெளிவாக சொல்லி இருக்கிறார். தமிழகத்தில் பா.ஜனதா மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்கிறது.
பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் கவனம் செலுத்துகிறோம். பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 9 தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளோம். அதில் வெற்றி பெறுவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. பாராளுமன்ற தேர்தலில் எங்களின் அகில இந்திய தலைமை வழிகாட்டுதலின்படி பணிகள் நடைபெறும். 2019-ம் ஆண்டு அப்போதைய கவர்னர், சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட அரசு பள்ளிகளில் படிக்கும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு காலை உணவு கொடுக்க முடிவு செய்தார். அப்போது அட்சய பாத்திரா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் சென்னை மாநகராட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. 20 ஆயிரம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய உணவு நல்ல தரத்துடன் இருக்க வேண்டும் என்பதற்கான கட்டமைப்புக்கு ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் அட்சய பாத்திரா அமைப்பு மாணவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கியது. அப்போது கொரோனா காலகட்டம். அதையும் தாண்டி அந்த பணி நடந்தது.
அப்போது ஒரு கமிட்டி அமைக்குமாறு கவர்னர் தமிழக அரசிடம் தெரிவித்தார். ஆனால் கமிட்டி அமைக்கப்படவில்லை. அதன் பிறகு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அந்த கட்டமைப்புக்கு குடிநீர் இணைப்பு, கழிவுநீர் இணைப்பு வழங்க வேண்டும். மின் இணைப்பு வழங்க வேண்டும் என்று அட்சய பாத்திரா அமைப்பு, அதிகாரிகளிடம் கேட்டது. அதற்கு அவர்கள் முதல்-அமைச்சர் மற்றும் அமைச் சர்களை பார்த்து ஒப்புதல் பெறுமாறு கூறினார்கள். அவர்கள் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை சந்திக்க நேரம் கேட்டும் இதுவரை ஒதுக்கப்படவில்லை. இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசு மிகப்பெரிய பொய்யை சொல்லி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.