இதில் முக்கியமாக திருமுல்லைவாயல் பகுதியை ஒட்டிய குடியிருப்புகளில் இருந்து அதிக அளவு கழிவுநீர் புழல் ஏரியில் கால்வாய் மற்றும் பைப்புகள் அமைத்துவிடப்படுவதாக கூறப்படுகிறது. திருமுல்லைவாயல், விஜயலட்சுமிபுரம், தென்றல் நகர், வெங்கடாசலம் நகர் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்பு பகுதியில் இருந்து மழைநீர் கால்வாய் மூலம் கழிநீர் ஏரியில் கலந்து வருகிறது. இதனால் இந்த பகுதியை ஒட்டி உள்ள ஏரிக்கரைகள் கழிவு நீராக காணப்படுகிறது. இதுகுறித்து புழல் ஏரி மற்றும் அராபத் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்க தலைவர் சுந்தரமூர்த்தி கூறியதாவது:-
திருமுல்லைவாயில் பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் புழல் ஏரியில் கலப்பதை ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக தடுக்க வேண்டும். திருமுல்லைவாயல் பகுதியில் விஜயலட்சுமிபுரம், வெங்கடபுரம், சரஸ்வதி நகரை ஒட்டிய தென்றல்நகர் கிழக்கு ஆகிய பகுதிகளில் உடனடியாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட வேண்டும். அதே போல் 10-க்கும் மேற்பட்ட நீர்வரத்து கால்வாய்களை பொது மக்கள் ஆக்கிரமித்துள்ளனர். இதை உடனடியாக தடுக்க வேண்டும். இது குறித்து ஆவடி மாநகராட்சி ஆணையரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆவடி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டமும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் முழுவதும் புழல் ஏரிக்கு திருப்பி விடப்படுகிறது. எனவே இப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை உடனடியாக முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். புழல் ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, புழல் ஏரியில் இருந்து தினமும் 416 மில்லியன் லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்கொண்ட 8 பகுதிகளுக்கு சப்ளை செய்யப்படுகிறது. புழல் ஏரியில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.