No results found

    செய்வினை வைத்ததாக குற்றச்சாட்டு - பெண்ணுக்கு வினோத தண்டனை அளித்த மூன்று பேர் கைது


    செய்வினை வைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட பெண்ணை எரியும் நிலக்கரி, ஆணிகளின் மீது நடக்க வைத்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் அரங்கேறி இருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டதை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மார்ச் 20 ஆம் தேதி துர்க் கிராமத்தின் கைலாஷ் நகர் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றதை அடுத்து, பெண்ணை துன்புறுத்திய இரண்டு பெண்கள், ஒரு ஆண் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண் மம்தா நிஷாத் இது குறித்து கூறும் போது, "சூனியம் வைத்ததாக குற்றம்சாட்டி எனது கணவரின் தம்பி, அவரது மனைவி மற்றும் சகோதரி என்னை அடிக்கடி துன்புறுத்தி வந்தனர். மார்ச் 20 ஆம் தேதி இரவு எனது கணவர் வெளியில் சென்றிருந்தார். அப்போது இவர்கள் மூவரும் சேர்ந்து, மந்திரவாதி ஒருவரிடம் என்னை அழைத்துச் சென்று நான் சூயனிம் வைக்கும் செயலில் ஈடுபடவில்லை என்பதை நிரூபிக்குமாறு கூறினர்."

    அங்கிருந்த மந்திரவாதி தன்னை 12 முறை கொளுந்துவிட்டு எரிந்த நிலக்கரி மீதும், ஒன்பது முறை ஆணிகளின் மீதும் நடக்க வைத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது கணவரிடம் தெரிவித்து இருக்கிறார். இதைத் தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கணவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். குற்றம்சாட்டப்பட்ட மூன்று உறவினர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், பெண்ணை துன்புறுத்திய மந்திரவாதி மைனர் என்பதால் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். கைதான உறவினர்கள் உள்ளூர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு பாதிக்கப்பட்ட பெண் போலீசாரிடம் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இருக்கிறார்.

    Previous Next

    نموذج الاتصال