இந்தூரில் நடந்த 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று இருந்தது. இந்த டெஸ்டில் 186 ரன்கள் குவித்த முன்னாள் கேப்டன் வீராட் கோலி ஆட்ட நாயகன் விருதை பெற்றார். 25 விக்கெட் வீழ்த்திய அஸ்வினும், 22 விக்கெட் கைப்பற்றிய ஜடேஜாவும் இணைந்து தொடர் நாயகன் விருதை பெற்றனர். 34 வயதான விராட் கோலி 1,205 நாட்களுக்கு பிறகு டெஸ்டில் சதம் அடித்தார். இதன் மூலம் தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்தார். இதற்கு முன்பு 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் வங்காள தேசத்துக்கு எதிரான டெஸ்டில் செஞ்சூரி (136 ரன்) அடித்து இருந்தார்.
இந்த நிலையில் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். ஆட்ட நாயகன் விருதை பெற்ற பிறகு அவர் இது தொடர்பாக கூறியதாவது:- ஒரு வீரராக என் மீது நான் வைத்து இருக்கும் எதிர்பார்ப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தது. நாக்பூர் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இருந்தே நான் நன்றாக பேட்டிங் செய்வது போல் உணர்ந்தேன். அணிக்காக முடிந்தவரை பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தினேன். கடந்த காலங்களில் கொடுத்த அதே உழைப்பை இப்போதும் கொடுத்து வருகிறேன். ஆனால் கடந்த காலங்களில் நான் ஆடிய தரத்துக்கு சமீப காலமாக விளையாடவில்லை என்பது வருத்தம் அளித்தது. ஆனாலும் நன்றாக பேட்டிங் செய்கின்றேன்.
ரன்களை குவித்து நான் யார் என்பதை நிரூபிக்க வேண்டிய இடத்தில் இல்லை. நான் ஏன் அணியில் இன்னும் இருக்கிறேன். களத்தில் இறக்கப்படுவது ஏன் என்பதை உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். அதற்காக ரன்களை அடிக்க வேண்டிய அவசியம் இருந்தது. நான் இப்படி ஆட வேண்டும். அப்படி ஆட வேண்டும் என பலரும் என் மீது வைக்கும் விமர்சனத்தில் இருந்து இனி விலகி இருப்பேன் என்பது நிம்மதியாக இருக்கிறது. இவ்வாறு விராட் கோலி கூறி உள்ளார். அடுத்து இந்தியா- ஆஸ்திரேலியா இடையே 3 ஒருநாள் போட்டித் தொடர் நடக்கிறது. முதல் ஆட்டம் வருகிற 17-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.