நம் எல்லோருக்குமே சொந்த வீட்டுக் கனவு என்பது நிச்சயம் இருக்கும். நம்முடைய வாழ்நாள் வருமானங்கள் யாவும் பெரும்பாலும் சொந்த வீட்டைக் கட்டுவதிலோ, அல்லது வாங்குவதிலோதான் அர்த்தமுள்ளதாக மாறுகின்றன. வீடு என்பது வசதியான வசிக்குமிடம் என்பது மட்டுமில்லாமல் அது தலைமுறைகளுக்கான அசையாத சொத்தாகவும் இருப்பதால் செல்வங்களில் வீடு முதன்மையாகக் கருதப்படுகிறது.
சிலருக்கு வீட்டுக்கு மேல் வீடு சேர்ந்து வருமானம் கொழிக்கும் வீட்டு உரிமையாளர் என்ற அந்தஸ்து கிடைக்கும். சிலருக்கோ வாழ்நாள் முழுவதும் வாடகை வீட்டில் பல்வேறு துன்பத்தில் உழன்று கிடப்பதும் நடக்கும்.
உரிய பரிகாரங்கள் செய்வதன் மூலம் சொந்த வீடு யோகத்தைப் பெறலாம் என்கிறது சாஸ்திரம். அவ்வாறு ஆன்மிகம் கூறும் பரிகாரங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.
ஒருவருடைய ஜாதகத்தில் சொந்த வீடு அமையும் யோகத்தைக் குறிப்பிடும் இடம் சுக ஸ்தானம் என்று சொல்லப்படும் ஜோதிடக் கட்டத்தில் உள்ள நான்காவது இடம் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
இந்த நான்காம் இடத்துக்கு உரிய செவ்வாய், சுக்கிரன் ஆகியோரின் அமைப்பைப் பொறுத்தே ஒருவருக்குச் சொந்த வீடு அமையுமா, இல்லையா என்பதை நிர்ணயித்துச் சொல்ல முடியும். பூர்வ புண்ணிய அமைப்புகளின் படியே சொந்த வீடு யோகம் கிட்டும் என்றாலும் தெளிவான திட்டமிடல், சரியான காலம், திடீர் யோகம், கடுமையான உழைப்பு, பித்ருக்களின் ஆசி, தெய்வ கடாட்சம் போன்றவை சேர்ந்தாலும் சொந்த வீடு யோகம் நிச்சயம் கிட்டும் எனலாம்.
திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் வழியில் உள்ளது மண்ணச்சநல்லூர். சமயபுரம் டோல்கேட்டில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள இந்தத் தலத்துக்கு டவுன் பஸ் வசதி உண்டு. இந்தத் தலத்து இறைவன் 'ஸ்ரீபூமிநாதர்' என்கிற திருநாமம் கொண்டவர். அம்பாள் 'ஸ்ரீஅறம் வளர்த்த நாயகி.' வீடு, மனை, தோட்டம், துரவு எல்லாம் வாங்குகிற யோகத்தை அருள்பவர் இவர் என்பதால் வாய்ப்பு இருப்பவர்கள் இந்த ஆலயம் சென்று தரிசித்து பலன் பெறலாம்.
அதேபோல், சிறுவாபுரி உறையும் அருள்மிகு பாலசுப்ரமணியசுவாமியும் சொந்த வீடு அமையும் யோகத்தை அருள்பவர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியிலிருந்து மேற்கே 10 கி.மீ. தொலைவில் உள்ளது சிறுவாபுரி. இங்கு சென்று வழிபட்டோர் பலரும் சொந்த வீடு யோகம் அமையப் பெற்றதை நீங்களே அறிந்திருக்கலாம்.
அதேபோல பூமியைக் காக்க அவதாரம் எடுத்த பூவராக சுவாமியை சனிக்கிழமை தோறும் தரிசித்து வழிபட்டால் சொந்த வீட்டுக் கனவு மெய்ப்படும். மரக்காணம் பூமீஸ்வரர் கோயில், திருநின்றவூர் ஹிருதயாலீஸ்வரர் கோயில், மண் தலங்களான காஞ்சி ஏகாம்பரநாதர், திருவாரூர் தியாகராஜர் கோயில்களையும் தரிசித்து பலன் பெறலாம்.
'திருமுறைகளில் இல்லாத தீர்வே இல்லை' என்று ஆன்மிகம் சொல்லும். அதன்படி சொந்த வீடு அமைய வேண்டும் விரும்புவோர் திருஞானசம்பந்தப் பெருமான் திருச்சிராப்பள்ளியில் உறையும் தாயுமானஸ்வாமியை எண்ணி உருகிப் பாடிய "நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே றொன்றுடையானை..." என்ற பதிகத்தைப் பாடி வர இனிமையான வசதியான சொந்த வீடு நிச்சயம் அமையும் என்கிறது திருமுறை.
ஜோதிட ரீதியாக ஜாதகருடைய கட்டத்தில் செவ்வாய் பகவான் பலமற்று இருந்தால் சொந்த வீடு அமையும் யோகம் தடைப்படும். இதனால் செவ்வாய்க்கு பரிகாரமாக, அவரின் அதிதெய்வமான முருகப்பெருமானை சிவப்பு நிற மலர்களால் அர்ச்சித்து வழிபட்டு வர விரைவில் சொந்தவீடு அமையும். சொந்த வீடு அமையத் தடை உண்டானாலோ, தாமதம் உண்டானாலோ உடனே திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவனை தரிசனம் செய்து வாருங்கள். செந்தூர் கடல் நீரை எடுத்து வந்து மஞ்சளுடன் கலந்து, உங்கள் வீட்டில் தெளியுங்கள். எப்போதும் முருகப்பெருமானின் திருநாமத்தைச் சொல்லி வாருங்கள். நிச்சயம் உங்கள் கனவு பலிக்கும். குறிப்பாக அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பதிகம், "அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற அண்டர்மன மகிழ்மீற..." என்ற பாடலை மனமுருகிப் பாடி வாருங்கள்.
சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானை ஜாதி மல்லி மலர் கொண்டு அர்ச்சித்தால் சொந்த வீடு அமையும் என்பதும் நம்பிக்கை. எல்லாவித சிக்கல்களுக்கும் பலனளிக்கும் அபிராமி அந்தாதியின் 'உறைகின்ற நின் திருக்கோயிலில் நின்கேள்வர் ஒருபக்கமோ..., பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர்விசும்பும்..." என்ற இந்த இரு பாடல்களும் தினமும் சொல்லிவர சொந்த வீடு நிச்சயம் அமையும் என்கிறார் அபிராமி பட்டர்.
சொந்த வீடு விருப்பம் என்பது கூடாத ஆசை ஒன்றுமில்லை. ஒரு மனிதனின் குறைந்த பட்சம் விருப்பம்தான் அது. எனினும் ஆழம் அறியாமல் காலை விட்டுவிடாதீர்கள். உங்கள் பலத்துக்கு ஏற்ப திட்டமிட்டு வாங்குங்கள். சரியான ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை. கடன் பெற முடியவில்லை, ஒப்புதல் கிடைக்கவில்லை, வில்லங்கம் உள்ளது என்ற நிலை வந்தால் உங்கள் வசதிக்கேற்ப ஒரு உலோக விளக்கை வாங்கி உங்கள் வீட்டில் வழிபட்டு வசதியில்லாத ஒரு சிவாலயத்துக்குக் கொடுத்து விடுங்கள். வசதி இல்லாதவர்கள் விளக்கேற்ற உதவும் எண்ணெய், திரி போன்றவைகளைக் கூட உபயமாக அளிக்கலாம். ஈசன் சந்நிதியில் விளக்கேற்ற வழி செய்தவர்களின் வீட்டை வசதியாக மாற்றிக் கொடுப்பான் ஈசன் என்பது ஐதிகம். அதேபோல் ராம நாமத்தை திருமண்ணால் செங்கல்லில் எழுதி விஷ்ணு ஆலயம் அமைக்க தானமாகக் கொடுத்தால் வீடு வாங்கவும், கட்டவும் முடியும் என்பதும் நம்பிக்கை.
இவற்றோடு நரசிம்மர் செவ்வாய் வழிபாடு, முருகப்பெருமான் மற்றும் செவ்வாய் பகவானை எண்ணி நோற்கப்படும் செவ்வாய் விரதம், குருவாயூர் கண்ணனுக்கு அவல் நைவேத்தியம் வைத்து வழிபடும் புதன் வழிபாடு, பைரவ மூர்த்தி வழிபாடு, உங்கள் வேண்டுதல்களை சூட்சுமமாக இருந்து நடத்தித்தர உதவும் வண்ணம் செய்யப்படும் குல தெய்வத்திற்கான படையல் வழிபாடு, அமாவாசை வழிபாடு போன்றவையும் நல்ல பலன்களை அளிக்கும்.
மேற்கண்ட எளிய வகை தரிசனங்கள், வழிபாடுகள், விரதங்கள், பாடல்கள் என இதில் எவருக்கு எது சாத்தியமோ அதை மனமுவந்து நம்பிக்கையோடு கடைப்பிடியுங்கள். நிச்சயம் தெய்வ அருளால் உங்களுக்கு சொந்த வீடு அமையும் என்கிறது ஆன்மிகம்.