No results found

    ரூ.10 கோடி கேட்டு தொலைபேசியில் மிரட்டல் - நிதின் கட்கரிக்கு வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு


    பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நிதின் கட்கரி, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இவரது மக்கள் தொடர்பு அலுவலகம் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் ஆரஞ்சு சிட்டி மருத்துவமனை எதிரில் உள்ளது. இந்நிலையில், நிதின் கட்கரி அலுவலகத்துக்கு நேற்று காலை ஜெயேஷ் புஜாரி என்ற ஜெயேஷ் காந்தா என்பவர் போன் செய்தார். அவர் ரூ.10 கோடி தரவேண்டும் என கேட்டார். மேலும் பணம் கொடுக்காவிட்டால் நிதின் கட்கரியை தாக்குவேன் என மிரட்டினார். அவர் காலை 2 முறையும், மதியம் 12 மணியளவில் ஒரு முறையும் போன் செய்து மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து அலுவலக ஊழியர்கள் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மிரட்டல் போன் அழைப்பு வந்ததை அடுத்து நாக்பூரில் உள்ள நிதின் கட்கரியின் வீடு, அலுவலகத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. நிதின் கட்கரி அலுவலகத்துக்கு மிரட்டல் அழைப்பு வருவது இது 2-வது முறையாகும். கடந்த ஜனவரி மாதம் 14-ம் தேதி புஜாரி எனக் கூறி ஒருவர் நிதின் கட்கரி அலுவலகத்துக்கு போன் செய்து ரூ.100 கோடி கேட்டு மிரட்டினார். அவர் தாவூத் இப்ராகிம் கூட்டாளி எனவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Previous Next

    نموذج الاتصال