பின்னர் 1992-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா பெண் போலீசுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் மகளிர் காவல் நிலையத்தை தொடங்கினார். சென்னை ஆயிரம் விளக்கில் முழுக்க முழுக்க பெண்களையே கொண்ட அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் தொடங்கப்பட்டது. பின்னர் இந்த காவல் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் தற்போது 202 அனைத்து பெண் போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக பெண் போலீஸ் கமாண்டோ படையையும் ஜெயலலிதா உருவாக்கினார். 2004-ம் ஆண்டு ஜனவரி மாதம் பெண் போலீசார் அடங்கிய அதிரடிப்படை, கமாண்டோ படை, விரைவு அதிரடிப்படை ஆகியவற்றுடன் கூடிய பெண் போலீஸ் படை ஏற்படுத்தப்பட்டது. 2009-ம் ஆண்டு தமிழகத்தின் முதல் பெண் டி.ஜி.பி.யாக லத்திகா சரண் 2009-ம் ஆண்டு பணி அமர்த்தப்பட்டார். இவர் சென்னை மாநகர போலீஸ் கமிஷனராகவும் பொறுப்பு வகித்து பெருமை சேர்த்துள்ளார். தற்போது தமிழகம் முழுவதும் காவலர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை காவல்துறையின் அனைத்து பொறுப்புகளிலும் பெண் போலீசாரும் பெண் அதிகாரிகளும் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள்.
சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு, மத்திய குற்றப்பிரிவு, சி.பி.சி.ஐ.டி., என காவல் துறையில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் ஆண் காவலர்களுக்கு இணையாக பெண் போலீசார் மெச்சத் தகுந்த பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சிறப்பான பணிகளுக்கான பல்வேறு விருதுகளையும் பெற்று பெண் போலீசார் பாராட்டுகளையும் பெற்று வருகிறார்கள். இப்படி தமிழக காவல் துறையில் பெண் போலீசார் பொன்விழா காணும் இந்த நேரத்தில் அவர்களை கவுரவிக்கும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்க உள்ளார். இதுதொடர்பான விழாவை வருகிற 16-ந் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான திலகவதி கூறும்போது, பொன்விழா ஆண்டில் தமிழக போலீசார் அடியெடுத்து வைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. பெண் காவலர்கள் சீருடையில் கம்பீரத்துடன் ரோந்து வாகனத்தை ஓட்டிச் செல்வது மற்ற பெண்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கும் என்றார். காவல் பணியில் பெண்கள் இருப்பது சமூகத்தில் பாதிக்கப்படும் பெண்களுக்கு தன்னம்பிக்கையையும் தைரியத்தையும் ஏற்படுத்தும். தயக்கமின்றி அவர்கள் புகார் அளிக்கவும் இது வகை செய்கிறது என்றும் திலகவதி கூறினார். சென்னை போலீசில் 3 சகோதரிகளான 3 பேர் இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவில் பணிபுரிந்து வரும் சுகன்யா, நுண்ணறிவு பிரிவில் பணியாற்றும் ஜெயசுதா, பூந்தமல்லி போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் சுபாஷினி ஆகியோர் பல்வேறு திறனாய்வு போட்டிகளிலும் பங்கேற்று தமிழக காவல் துறைக்கு பெருமை சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.